அதிமுக கூட்டணியில் 41 தொகுதி கேட்டுள்ளோம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல எடப்பாடி பழனிசாமி: பிரேமலதா காட்டமான பேட்டி

தர்மபுரி: எடப்பாடி பழனிசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று தர்மபுரியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தர்மபுரியில், தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தர்மபுரியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவை பொறுத்தவரை 2021ம் ஆண்டு தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இதையொட்டி 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் முடிவின்படி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளோம். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் அளித்த தேர்தல் அறிக்கையை, இன்று பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளது.

அதனை நேரம் வரும் போது தெரிவிப்போம். கமலஹாசன் எவ்வளவு வாக்குகள் வாங்கப் போகிறார் என்பதை தேர்தல் முடிவுகள் தான் அவருக்கு சொல்லும். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் கட்சியினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால், காலதாமதம் ஏற்படுத்தாமல், அதிமுகவில் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். விரைவாக முடிவெடுத்தால், மக்களை சந்திக்க வசதியாக இருக்கும். இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, விஜயகாந்த் பிரசாரம் செய்ய வருவார். ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டுள்ளோம். இந்த தேர்தலிலும் அதே தொகுதிகளை கேட்டுள்ளோம்.

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா பூரண குணமடைந்து, தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும். அவரது வருகையால் அதிமுகவில் என்ன நடக்கும் என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இப்போது வரை தேமுதிக, அதிமுக கூட்டணியில்தான் தொடர்ந்து இருந்து வருகிறது. சசிகலாவை ஒரு பெண்ணாக நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு?

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளை கூட்டணியில் அதிமுகவிடம் கேட்டு வருகிறது. ஆனால் 10 தொகுதிகளுக்கு மேல் தர மாட்டோம் என்று அதிமுக உறுதியாக கூறிவிட்டதாக தெரிகிறது. கேட்ட தொகுதியில் கிடைக்காவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற தேமுதிக முடிவு செய்துள்ளது. வரும் 30ம் தேதி தேமுதிகவின் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்குப் பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சசிகலாவுடன் நெருக்கம்

அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்டுள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார். ஆனால், அதிமுக தரப்பில் ஒற்றை இலக்கத்திலேயே சீட் தர முடியும் என்று கறாராக கூறிவிட்டார்களாம். இதனால் கடுப்பான பிரேமலதா எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்று சாடியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சீட் பேரத்தில் போதுமானது கிடைக்கவில்லை என்றால், அதிமுகவில் உள்ள எடப்பாடி அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து சசிகலாவின் கைகளை பலப்படுத்தும் முயற்சியில் இறங்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே சசிகலாவுடன் பிரேமலதா நெருக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

Related Stories: