ரஜினி தொடங்க இருந்த கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி புதிதாக கட்சி தொடங்குகிறார்?

சென்னை: ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜவில் முக்கிய பொறுப்பில் இருந்த மூத்த தலைவர் அர்ஜூன மூர்த்தியை நியமித்திருந்தார். தற்போது அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில், அர்ஜூன மூர்த்தியும் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.   இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  நடிகர் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது அனைவரும் அறிந்ததே. உடல் நலக்குறைவால் மருத்துவர்கள் ஆலோசனையின் காரணமாக அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாம் அறிந்த ஒன்றே. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன். இதற்கு ஈடு செய்யும் வகையில்  ரஜினிகாந்தின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தமிழகத்தின் அரசியல் மாற்றம் இப்ப இல்லனா எப்பவும் இல்லை என்று சொல்லிய ரஜினியின் நல்ல எண்ணத்துடன் தமிழகத்தின் மீது அவர் கொண்ட அக்கறை நிறைவேறும்.

அவர் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த ரஜினியை வணங்கி மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன். எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் ரஜினிகாந்த் தான். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை ஏற்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாற்றம் தருவேன் என்று அவர் கூறியுள்ளது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டபோது, ‘‘நாளை புதிய(கட்சி தொடங்குவது குறித்து) அறிவிப்புக்களை வெளியிடுவேன்’’ என்றார்.

Related Stories: