அரசு ஊழியர் கோரிக்கையை கேட்க கூட அதிமுக அரசு தயாராக இல்லை பிப்.2 முதல் நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு: போராட்ட ஆயத்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம், வணிகவரிப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து, ‘உரிமை மீட்பு வெறும் பேரல்ல, புனிதப் போர்’ என்று அறிவித்துள்ளீர்கள். உங்களது கோரிக்கைகள் அனைத்திற்கும் தார்மீக அடிப்படையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசு அமைந்ததும் இக்கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும். அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் கலைஞர். அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கியவர் கலைஞர்.

இந்தக் கருணைக் கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு கழக அரசுதான். ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். 2018ம் ஆண்டு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து நான் பேசினேன். பரிசீலிப்பதாக அரசு சொன்னது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளை கவனிக்கிறோம் என்று அரசு சார்பில் சொன்னதால் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால் 23 மாதம் ஆகிவிட்டது. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது குற்றக் குறிப்பாணை போட்டுள்ளது அரசு. அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படையாக அரசு சார்பில் பொதுவெளியில் வெளியிட்டது பழனிசாமி அரசு.

ஒரு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் என்ன ஊதியம் வாங்குகிறார். எம்.இ.படித்த இளைஞர் எவ்வளவு ஊதியம் வாங்குகிறார் என்று சொல்லி, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களைக் கிண்டல் செய்தார் பழனிசாமி. இதைப் போல மோசமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றும் நீங்கள் அறிவித்துள்ளீர்கள். உங்கள் போராட்டத்தை தார்மீக அடிப்படையில் நாங்கள் ஆதரிக்கிறோம். திமுக ஆட்சி அமைந்ததும், அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி நல்ல முடிவுகளை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: