சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது விடுதலையானார் சசிகலா: கொரோனா காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை: பிப்ரவரி முதல் வாரம் சென்னை திரும்ப முடிவு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை சசிகலா நேற்று முடித்தார். இதையடுத்து, சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதால், பிப்ரவரி முதல் வாரத்தில்  சென்னை திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கில், அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 2017 ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது. மேலும், தனி நீதிமன்றம் தண்டனை வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை உறுதி செய்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஜெயலலிதா இறந்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு., பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டனர்.

இவர்களின் தண்டனை காலம் அடுத்த மாதம் 14ம்  தேதி முடிகிறது. ஆனால், இவ்வழக்கில் சசிகலா ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்து, ஜனவரி 27ம்  தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20ம் தேதி  திடீரென உடல்நிலை பாதித்தது. சிறை நிர்வாகம் அவரை பெங்களூரு பவுரிங்  அரசு மருத்துவமனையில் சேர்த்தது. பின்னர், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்ைச பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது உடல்நிலை தேறியுள்ளார். சசிகலாவின் தண்டனை நேற்றுடன் முடிந்ததால், அவரை விடுதலை செய்வது தொடர்பாக  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, கூடுதல்  கண்காணிப்பாளர் லதா ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு விக்டோரியா  அரசு மருத்துவமனை வந்தனர். அங்கு, சசிகலாவை விடுதலை செய்வது  தொடர்பாக அவரிடம் 16 ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்.

பின்னர், சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணங்களை  வழங்கினர். இதன் மூலம்,  சசிகலாவின் 4 ஆண்டு சிறை வாழ்க்கை முடிந்தது. ஆனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால், இதே  மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கியுள்ளனர். வரும் 30 அல்லது 31ம் தேதி  வரை மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவார் என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னைக்கு திரும்புவார் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுதாகரன் விடுதலை  கேள்விக்குறி

சசிகலா, இளவரசியுடன் சிறையில் அடைக்கப்பட்ட வி.என்.சுதாகரன் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை இன்னும் செலுத்தவில்லை. சசிகலா, இளவரசி செலுத்தி விட்டதால் அவர்கள் விடுதலை உறுதியானது. சுதாகரன் எப்போது அபராதத்தை கட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால், அவருடைய விடுதலை கேள்வி குறியாகி உள்ளது.

இளவரசி வந்ததும் சென்னை பயணம்

சொத்து  குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலையாகி இருந்தாலும், வரும் 31ம் தேதி வரை  அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பின்னர், டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டதும் 5 நாட்கள் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்குகிறார். பிப்ரவரி 5ம் தேதி சிறையில் இருந்து இளவரசியும் விடுதலையான பிறகு, அவருடன் ஒன்றாக சென்னை செல்ல  சசிகலா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இனிப்பு, கொண்டாட்டம்

சசிகலா  விடுதலை செய்யப்பட்டதை ஒட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து அம்மா  மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏகள்,  தற்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை முன்  வந்திருந்தினர். சசிகலா விடுதலை தகவல் வெளியானவுடன் வாழ்த்து  முழக்கமிட்டும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  தொண்டர்கள் வருகையால் மருத்துவமனை வளாகத்தில் கடும் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

சிறைக்கு வந்த 1,500 கடிதங்கள்

சசிகலா சிறையிலிருந்த கடந்த 4 ஆண்டுகளில் அவருக்கு  ஆயிரத்து 500-க்கும்  மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. நேற்று அவர் விடுதலையானதால், தனக்கு வந்த கடிதங்களை இளவரசியிடம் ஒப்படைக்கும்படி சிறை நிர்வாகத்திடம் சசிகலா நேற்று கடிதம் கொடுத்தார். ‘எனக்கு வந்த கடிதங்களை  தவிர வேறு எந்த சொத்துக்களும் எடுத்துச் செல்ல என்னிடம் இல்லை. எனக்கு வந்த கடிதங்களை இளவரசியிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

அமலாக்க துறை கடிதம் ஒப்படைப்பு

கடந்தாண்டு  சசிகலா, அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டாத போயஸ் கார்டன் இல்லம், சிறுதாவூர்  பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துகளை பினாமி தடுப்பு பிரிவு  சட்டத்தின் கீழ் முடக்கியது. மேலும், சொத்துக்களை வாங்கியதற்கான வருமான வரி தகவல்களையும்,  மேலும் பல கூடுதல் தகவல்களையும் வழங்கக் கோரி அமலாக்கத் துறையும் பலமுறை சசிகலாவுக்கு கடிதம் அனுப்பியது. இந்த கடிதங்களுக்கு சசிகலா பதில் அளிக்காத நிலையில், அவருக்கு மூன்று நாட்களுக்கு  முன்பு சொத்துக்கள், வருமான தகவல்களை கேட்டு அமலாக்கத் துறை பரப்பன  அக்ரஹாரா சிறைக்கு கடிதம் அனுப்பியது. கடிதம் சிறைக்கு வந்தபோது  சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால், நேற்று காலை  அவருக்கு விடுதலை பத்திரத்தை வழங்கும்போது அமலாக்கத் துறையின் கடிதத்தையும் அவரிடம்  சிறை கண்காணிப்பாளர்  ஒப்படைத்தார்.

Related Stories: