79.75 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு : பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்

சென்னை: தமிழக அரசால் 79.75 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.79.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பீனிக்ஸ் பறவை வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதில் போதிய தொழில்நுட்பம் இல்லாததால், அந்த பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், துபாயில் இருந்து பொறியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியுடன் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பு பணிகள் ஒவ்வொரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஐஐடி ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் தான் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல் வெளி மற்றும் நீர் தடாகங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. மேலும், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட அலங்கார பூச்செடிகளை கொண்டு பசுமைத்தோட்டம் அமைக்கப்பட்டன. 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை வரும் ஜனவரி 27ம் தேதி திறக்கப்படும் என்று கடந்த 19ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்பேரில், ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறந்து வைத்ததற்கான கல்வெட்டையும் முதல்வர் திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதுவரை அமைச்சர்கள் யாரும் உள்ளே அனுமதிக்காமல், இரும்பு தடுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்திய பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக இரும்பு தடுப்பை தாண்டி வந்து ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நேற்று அதிகாலை 6 முதலே சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் குவிந்தனர். அவர்களை ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடத்துக்குள் அனுமதிக்கவில்லை. காமராஜர் சாலையில் இருந்தபடியே விழா நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு வசதியாக ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள காமராஜர் சாலையில்,  20க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய எல்இடி டி.வி. மூலம் தொண்டர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ₹12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு 9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ மற்றும் ஆடியோ பேச்சின் பதிவு, அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படுகிறது. இதில், ஜெயலலிதா பேசுவது போன்று தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது.

மாஸ்க், சமூக இடைவெளி இல்லை

காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, வாலாஜா சாலைகள் முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. இந்த சாலைகளில் திரண்ட தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை. சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்த முதியவர்கள்

காமராஜர் சாலையில் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி 65 வயது முதியவர் ஒருவரும், 60 வயது பாட்டி ஒருவர் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தனர்.

கலைஞர் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். பிறகு அவர்கள், கட்சி வேறுபாட்டை மறந்து அருகில் அமைந்துள்ள திமுக தலைவர் கலைஞரின்  சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பலர் அதிமுக கரை வேட்டிகளுடனும், பலர் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் போட்ட சட்டை அணிந்து கொண்டும் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்கள் கூறும்போது, தமிழகத்தின் மூத்த தலைவராக இருந்தவர் கலைஞர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர். எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தவர். எம்ஜிஆருக்கே தலைவராக இருந்தவர். இதனால்தான் கட்சி வேறுபாடு இன்றி அஞ்சலி செலுத்தினோம் என்றனர்.

Related Stories: