ஜனவரியில் பெய்த எதிர்பாராத மழையால் நெல்லை வேய்ந்தான்குளம், பெரியகுளத்தில் பறவைகள் முகாம்

நெல்லை: நெல்லை வேய்ந்தான்குளம் மற்றும் என்ஜிஒ காலனி பெரியகுளம் ஜனவரி மாதம் எதிர்பாரமல் பெய்த கனமழையால் ஓரளவு நிரம்பியதால் கடந்த ஆண்டு போல் மீண்டும் உள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் முகாமிடத்தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பல்வேறு குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுமக்கள், பல்வேறு சேவை நிறுவனங்கள் பங்களிப்புடன் சீரமைப்பு பணி நடந்தது. இதில் மாநகர பகுதியிலும் 10 குளங்கள் சீரமைக்கப்பட்டன. பாளை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வேய்ந்தான் குளமும் சீரமைக்கப்பட்டு பறவைகள் கூடுகட்டி தங்குவதற்கு வசதியாக குளத்தின் மையப்பகுதிகளில் மண் திடல்கள் அமைக்கப்பட்டன. இதில் முள் மரங்கள் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்பட்டன.

இதனால் கடந்த ஆண்டு ஏராளமான உள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் திரண்டு வந்து முகாமிட்டன. அவை கூடுகட்டி குஞ்சு பொறித்தன. இதனால் இந்த பறவைகளை பார்வையிடுவதற்காக ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலையில் குளக்கறைகளில் படையெடுத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வரை இங்கு தண்ணீர் இருந்ததால் குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்து. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் குளத்திற்கு தண்ணீர் பெருகுவதில் தாமதம் ஏற்பட்டது.  ஜனவரி முதல் வாரம் வரை பாதி அளவிலேயே வேய்ந்தான்குளம் மற்றும் பெரியகுளம் நிரம்பியிருந்தன. இதற்கு மழை குறைவு மற்றும் குளத்திற்கு நீர்வரும் பகுதிகளில் அடைப்பு போன்றவை காரணங்களாக இருந்தன. ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி 16ம்தேதி வரை நெல்லை மாவட்டத்தில் கனமழை வெளுத்துக்கட்டியது.

வழக்கமாக ஜனவரி மாதம் பெரிய அளவில் மழை இருக்காது. பனிபொழிவே அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு ஜனவரில் 10 நாட்கள் வரலாறு காணாத மழை  பதிவானது. இதன் காரணமாக வேய்ந்தான்குளம், என்ஜிஒ காலனி பெரியகுளம் உள்ளிட்ட மாநகரில் உள்ள குளங்களிலும் தண்ணீர் அதிகளவில் பெருகியுள்ளது. இதன் காரணமாக வேய்ந்தான்குளத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் மீண்டும் முகாமிடத்தொடங்கியுள்ளன. மணல் திட்டுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பான இந்தப்பகுதியில் பறவைகள் முகாமிட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு ரம்யமான காட்சியாக உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டும் அதிக அளவில் இங்கு பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் தொடர்ந்து 2வது வருடமாக கோடைவரை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த குளத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் நள்ளிரவு நேரங்களில் கைவரிசை காட்டினர். கோடை தொடங்கியதும் குளத்து நீரை லாரிகளில் பிடித்து, மீன்பிடிப்பது செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். எனவே இந்த முறையில் இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>