புதுவை காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் விலகல்?: முதல்வர் நாராயணசாமி கலக்கம்.!!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆளும் காங்கிரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லிக்கு சென்றுள்ள இருவரும், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகின்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கின்றனர். பின்னர் புதுச்சேரி திரும்பும் அவர்கள், வரும், 31ம் தேதி ஏஎப்டி மைதானத்தில்  நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, தங்களது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைக்க உள்ளனர்.

இதற்கிடையே ஆளும் காங்கிரசில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் வெளியேறும் சூழல் உள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. புதுச்சேரி சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 33  ஆக இருக்கிறது. தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம், நியமன எம்எல்ஏ சங்கர் மறைவு ஆகிய காரணங்களால், பலம் 31 ஆக குறைந்தது. இதில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ராஜினாமாவால் மொத்த எம்எல்ஏக்களின் பலம் 29 ஆக தற்போது  இருக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ்- 12, திமுக- 3 மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் 16 ஆக இருக்கிறது.

இதனால் தற்போதைய சூழலில் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் மேலும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினால் அரசு கவிழும் நிலை ஏற்படும். உடனடியாக கவர்னர் ஆட்சி புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்கட்சி வரிசையில் உள்ள பிரதான எதிர்கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்கவில்லை. கடைசி நேரத்தில் காங்கிரசை ஆதரித்தால் ஆட்சி கவிழ்வதில் இருந்து காப்பாற்றப்படும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக குறைவுதான்.

இந்நிலையில், கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை ஏற்கும் போது, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதே என்.ஆர் காங்கிரசின் நிலைப்பாடாக இருக்கிறது. ஏற்கனவே பாஜகவின் முதல்வர்  வேட்பாளர் நமச்சிவாயம் முன்மொழியப்படுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், என். ஆர் காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே வரும் 31ம் தேதி பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா புதுச்சேரி வருகை தரவுள்ளார். ஓட்டல் அக்கார்டில் மதியம் 1.45 முதல் 2. 45 வரை மதிய விருந்துக்கு என். ஆர் காங்கிரஸ் - அதிமுக தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் ரங்கசாமி கலந்து கொள்வாரா? அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: