கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு வேகமெடுத்துள்ளது. இதனால், பதிவுத்துறையில் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று  பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் மட்டும் அதிகப்பட்சமாக 23 ஆயிரம் ஆவணங்கள் பதிவாகி 134 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2018 பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு வருகிது.

ஆரம்பத்தில் பத்திரப்பதிவுகளில் இடர்பாடுகள் இருந்தாலும், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பத்திரப்பதிவில் புதிய இலக்கை  பதிவுத்துறை எட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த 2019 செப்டம்பர் 12ல் 18,581 ஆவணங்களும், 2019 மார்ச் 13ல் 18,674ம், 2020 பிப்ரவரி 26ம் தேதி 18,703, 2019 செப்டம்பர் 4ம் தேதி 18,967ம், 2020 செப்டம்பர் 16ம் தேதி 19,681ம், 2020 செப்டம்பர் 14ம் தேதி  19,769ம், 2020 அக்டோபர் 29ம் தேதி 20,307ம், 2020 நவம்பர் 6ம் தேதி 21,206ம், 2020 டிசம்பர் 14ம் தேதி 21,128 ஆவணங்கள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திர பதிவு 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, காலை 9 மணி முதல் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரவும் அலுவலர்கள்  அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்தப்படி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர்.

தொடர்ந்து, பதிவுக்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பாமல் இரவு வரை பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே திருப்பி அளிக்கப்பட்டது. அதன்பேரில், இதுவரை பத்திரப்பதிவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு நேற்றுமுன்தினம்  மட்டும் 22,686 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 138.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  சார்பதிவாளர் அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவு பத்திரப்பதிவு இல்லாத நிலையில் வருவாய் சரிவு ஏற்பட்டது. இதனால், நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி சங்கர் பொறுப்பேற்ற பிறகு பத்திரப்பதிவை அதிகரிக்க பல்வேறு முயற்சி எடுத்தார். அதன்பேரில், கடந்த 4 மாதங்களாக பத்திரப்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பத்திரம் பதிவு செய்த  அன்றைய தினமே ஆவணங்களை திருப்பி தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப்பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கண்காணித்து வருகிறார். இதன் விளைவாக,  பதிவுத்துறை தனது இலக்கை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 3,07,849 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.1342.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2019ல் 2,28,239 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.1006.08 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில்  டிசம்பர் வரை ரூ.7030.59 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், பதிவுத்துறை இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>