காவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது?.. பொதுமக்கள் கேள்வி

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், தரை தளத்தில் சைக்கிள் மற்றும் டூவீலர் பார்க்கிங் வசதியும், பஸ் நிலைய பகுதியில் கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் தங்கும் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும், பணிகள் நிறைவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதேபோல், வெகு தொலைவில் இருந்து வரும் பயணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க வசதி இன்றி தவித்து வருகின்றனர். பஸ்சுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கையில் பிடித்து கொண்டு சாலையை கடக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: