×

10 தொகுதிகள்தான் என அதிமுக கறார்: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற முடிவு?: 30ம் தேதி முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.  கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டும், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும் (வன்னியர்களுக்கு 20%  இடஒதுக்கீடு அல்லது உள்ஒதுக்கீடு-பாமக, தேவேந்திர  குல வேளாளர்-புதிய தமிழகம்) உடனே நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் நிபந்தனை வைத்து வருகிறது.

குறிப்பாக, பாஜ 60 தொகுதிகள் கேட்டு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. இதற்கு அதிமுக தொடர்ந்து மறுத்து வருவதால் பாஜ தலைமை கடும் கோபத்தில் உள்ளது. இதனால், சசிகலாவை அதிமுகவில் இணைத்து  அவரது தலைமையில்  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற பாஜ திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக டிடிவி.தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி முடிந்து  உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாஜ கேட்கும் 60  தொகுதிகளை தோற்கும் தொகுதிகளை கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்ட பாஜ தலைமை  அதிமுகவை மிரட்டும் வகையில் கிடப்பில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரின் வழக்கை  கையில் எடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு புறம் பாமக வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அல்லது உள்ஒதுக்கீடு அறிவித்து அரசாணையை வெளியிட வேண்டும், 40 தொகுதிகள் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக,  அமைச்சர்கள் நடத்திய  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. வரும் 31ம் தேதி நடக்கும் பாமக நிர்வாக குழு கூட்டத்தில் அறிவிப்பு  வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதேபோல், புதிய  தமிழகம் கட்சியும் தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணையை வெளியிட கோரி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரசு இதுவரை எந்த அறிவிப்பும்  வெளியிடாததால் அவர்களும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 40 தொகுதிகளை கேட்டு வந்த தேமுதிகவுக்கு அதிமுக ஆலோசகர் செக் வைத்துள்ளார். தேமுதிகவுக்கு 2.2% மட்டும் வாக்கு வங்கி உள்ளதால் 10 சீட்டுக்கு மேல் தர வேண்டாம், அவர்களுக்கு பிடி  கொடுத்து பேச வேண்டாம் என  அதிமுக தலைமைக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. இதுகுறித்து தேமுதிக மாநில நிர்வாகிகள் கூறியதாவது:  அ.தி.மு.க கூட்டணியில் தேமுதிக நீடிப்பது மாதிரி தெரியவில்லை.

தேமுதிகவுக்கு 2.2% ஓட்டு வங்கி மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு அதிகப்பட்சமாக  10 தொகுதிகள் கொடுக்க அதிமுக ஆலோசகர் தலைமைக்கு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா அவரது மகன்  விஜயபிரபாகரன் ஆகியோர் 40க்கும் மேற்பட்ட  தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தான் 234 தொகுதிகளுக்கும்  பொறுப்பாளர்களையும்  அறிவித்தோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச அதிமுக சார்பில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த 2 அமைச்சர்களுடன் எங்கள் கட்சி சார்பில் சட்டசபை தேர்தல்  குறித்து பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது.

அப்போது அவர்களிடம், எல்லா இடங்களிலும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது என கூறுகிறோம். ஆனால்,  ஒரு இடத்தில் கூட அதிமுக தலைவர்கள் எங்கள் கூட்டணியில்தான்  தேமுதிக உள்ளது என்று சொல்லவில்லை. நாங்கள் உங்களை மதித்து பேசினாலும், நீங்கள் எங்களை மதிப்பது இல்லை. ஆனால், ராமதாஸை மட்டும் வலிய சென்று கூட்டணி குறித்து பேசுகிறீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பு  விடுக்கிறீர்கள். புதிய  தமிழகம் கட்சிக்கும் மதிப்பு கொடுத்து பேசுகிறீர்கள். எங்களை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை என அமைச்சர்களிடம் தேமுதிகவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முதல்வரிடம் பேசிவிட்டு நல்ல  பதிலை சொல்றேன் என சென்றவர்கள் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. அதனால்தான், தற்போது சசிகலா தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்து உள்ளார். சசிகலா  வந்தவுடன்  அவருடன் பேசி தங்களுக்கான முக்கியத்துவத்தை பெற பிரேமலதா முடிவு செய்துள்ளார். இதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். வரும் 30ம் தேதி  மண்டல  பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர்கள் கூறுகையில், தேமுதிக முதலில் சந்தித்த தேர்தலில் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 8% வாக்கு வங்கி பெற்றது. அடுத்த தேர்தலில் 9.9%  வாக்கு பெற்றது.  ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து 27 தொகுதிகளை வென்று எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். அதன்பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக  கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அதன்  பிறகு நடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. 104 தொகுதிகளுக்கு போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.  103 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவில்லை.

3% வாக்கு வங்கிதான் கிடைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. இதிலும் அனைத்து தொகுதிகளிலும்  தோல்விதான். 3 தொகுதிகளில் டெபாசிட் போச்சு. 2.2% தான் ஓட்டு கிடைச்சது.  தேமுதிக கட்சியில் முக்கிய நிர்வாகிகள் யாரும் இப்போது இல்லை. வேலை செய்யவும் ஆட்கள் கிடையாது. செலவும் செய்ய மாட்டார்கள். அதனால், அவர்களுக்கு கொடுக்கும் இடங்களில் கண்டிப்பாகத் தோற்று  விடுவார்கள். அவர்களுக்கு  அதிக இடங்களைக் கொடுத்து ஏன் தொகுதிகளை வீணாக்க வேண்டும் என நிர்வாகிகள் நினைக்கின்றனர்.

இதை அதிமுக தேர்தல் ஆலோசகர் தலைமைக்கு தெளிவாக  எடுத்துரைத்துள்ளார். அவர்களாக வெளியேறினாலும் வெளியேறட்டும். ஆனால், 10 சீட்டுக்கு மேல் கொடுக்க முடியாது என தெளிவாக சொல்லி விடுங்கள் என கூறிவிட்டார்.  இவ்வாறு அவர்கள் கூறினர். அதிமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் அடுத்தடுத்து வெளியேற முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,alliance ,constituencies ,announcement ,Temujin , AIADMK claims only 10 constituencies '': Temujin decides to leave AIADMK alliance ?: Key announcement on 30th
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...