போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, டெல்லி எல்லையில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 4  மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து குடியரசு நாளான நேற்று, விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.‘கிழக்கு டெல்லி, முகர்பா சவுக், காசிபூர், சீமாபுரி, டிக்ரி பார்டர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 8 அரசு பஸ்கள், 17 தனியார் வாகனங்களை விவசாயிகள் அடித்து நொறுக்கியுள்ளனர். பயங்கர ஆயுதங்களால் விவசாயிகள் தாக்கியதில் 86 போலீசார் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்’ என்று டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து பேரணியின் போது நடந்த கலவரம், வன்முறை சம்பவங்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் அமைப்பு) பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது. கலவரச் செயல்களில் ஈடுபட்டது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, பயங்கர ஆயுதங்களால் அரசு ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேரணியில் வன்முறை வெடித்ததையடுத்து, உடனடியாக போராட்டக் களங்களுக்கு திரும்புமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து டிராக்டர்கள் அனைத்தும் நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்லி எல்லைகளுக்கு திரும்பின. இந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் டெல்லி வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; கடந்த 62 நாட்களாக அமைதியான வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்குள் பிளவு ஏற்படுத்தி போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய மத்திய அரசு சதி செய்கிறது. மேலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்? செங்கோட்டைக்குள் இவ்வளவு பேரால் எப்படி எளிதில் செல்ல முயன்றது? டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு. டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். டெல்லி சட்டம் - ஒழுங்கை காக்க அமித்ஷா தவறிவிட்டதாகவும் குற்றம் சாடியுள்ளார்.

Related Stories: