மரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்!

பூமியின் சீதோஷ்ணம் சூரியனால் கட்டுப்படுத்தப்படுகிறது. பருவக் காலங்கள், கடல் ஓட்டங்கள், நீர் நடமாட்டங்கள் அனைத்தும் சூரியனால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் சூரியனிலிருந்து வரும் ஆற்றல் எல்லா காலத்திலும் ஒரே மாதிரி நிலையானது என நம்பப்பட்டது.ஆனால் -சூரியனில் உள்ள சூரியப் புள்ளிகளை கவனிக்கத் தொடங்கிய கலிலியோ போன்ற தொடக்க கால வானியல் அறிஞர்கள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் அதிகரிக்கிறது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சூரியப் புள்ளிகளைகொண்டு சூரியனின் இயல்பை கணிக்கும் பழக்கம் உருவானது.

ஒவ்வொரு பதினொரு ஆண்டுகளுக்கும் ஒருமுறை சூரியனின் காந்தப் புலத்தின் இயல்பு மாறுகிறது என்பதும் கண்டறியப்பட்டது. ஒரு காலத்தில் சூரியப் புள்ளிகளில் ஏற்படும் மாறுதல் இங்கிலாந்தின் கோதுமை விளைச்சலை பாதிக்கிறது என்றுகூட நம்பப்பட்டது. அது ஒரு தற்செயல் நிகழ்வு என்பதைப் பின்னர் விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். மறுபுறம் சூரியப் புள்ளிகளைத் தொடர்ந்து கவனிப்பதும் அதன் செயல் இயக்கங்களைப் பதிந்து வருவதுமான வேலைகள் நடக்கத் தொடங்கின. தற்போது விஞ்ஞானி பிரம் மற்றும் அவரது சக விஞ்ஞானிகள் இணைந்து மரங்களில் இருக்கும் ரேடியோ கார்பன்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சூரியனின் காந்தப் புலத்தைக் கணக்கிடும் புதிய முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

சூரியனிலிருந்து புரோட்டான்கள் மற்றும் ஹீலியத்தின் கருந்துகள்கள் பூமிக்கு வரும்போதும் அந்த காஸ்மிக் கதிர்கள் ரேடியோ கார்பனாக மாறுகின்றன. அப்போது அட்மாஸ்பியர் எனும் புவிவெளியில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு தேக்கங்களில் அவை இணைகின்றன. பிறகு அவை கடலிலும் மண்ணிலும் உள்ள கார்பன்களோடு தம்மை பரிமாறிக்கொள்கின்றன.மரங்கள் இந்த ரேடியோ கார்பன்களைக்கொண்ட கார்பன் டை ஆக்ஸைடை கணிசமாக எடுத்துக்கொள்வதால் இவை மரங்களில் வந்து தங்குகின்றன. எனவே, மரங்களின் வளையங்களைக் ஆராய்ச்சி செய்தால் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் சூரியனின் ரேடியோ கார்பன்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் எப்படி நிகழ்ந்ததென கண்டறிய இயலும். இதனால் சூரியனை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.

Related Stories: