உங்களுக்கு என்ன போபியா?

மனித மனம் நவீன விஞ்ஞானத் தாலும் புரிந்துகொள்ள சிக்கலானது. எண்ணற்ற உளவியல் முடிச்சுகள் கொண்டது. அவற்றில் போபியாக்களும் ஒன்று. போபியா என்பது பயம். போபோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். அங்கிருந்தே அச்சவுணர்வைக் குறிக்கும் உளச்சிக்கலுக்கு போபியா என்ற பெயர் வந்தது. எல்லா மனிதர்களுக்குமே பயம் என்ற உணர்வு உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட விஷயத்துக்கு அஞ்சுபவர்களாகவே இருக்கிறோம். இந்த பய உணர்வு விகிதம் அதிகரிக்கும்போது அது போபியாவாக மாறுகிறது. உளவியல் ரீதியாகச் சொன்னால் போபியா என்பது ஒருவகை பதற்றக் கோளாறு (Anxiety Disorder).

எத்தனைவகையான போபியா உண்டு என்பதற்கு எல்லையே இல்லை. பலநூறு வகையான போபியாக்கள் உலகில் உண்டு. உளவியலாளர்கள் அடிப்படையாக இதனை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். விலங்குகள் குறித்த அச்சம். உதாரணம், நாய், பூனை, சிலந்தி போன்றவற்றின் மீதான அச்சவுணர்வு. இயற்கைச் சூழல்கள் மீதான அச்சம். உதாரணம், உயரமான மலை உச்சி, இடி, இருட்டு போன்றவற்றின் மீதான பயம். ரத்தம், காயம், மருத்துவம் மீதான அச்சம். உதாரணம் ஊசி, உடைந்த எலும்புகள், கீழே விழுதல் ஆகியவற்றின் மீதான அச்சம். குறிப்பிட்ட சூழல்கள் மீதான அச்சம். உதாரணமாக, பறத்தல், எலிவேட்டரில் பயணித்தல், நீந்துதல் மீதான அச்சம். இன்னபிற என்ற வகையில்தான் நிறைய உண்டு. கூட்டத்துக்கு அஞ்சுதல், மேடைக்கு அஞ்சுதல், இரைச்சலுக்கு அஞ்சுதல், ஆண்களுக்கு அஞ்சுதல் என்ற பலவகையான போபியாக்கள் இவ்வகையில் உள்ளன.

இதைத் தவிர சமூக அச்சங்கள் என்ற வகையும் உண்டு. இது உளவியல் பாதிப்பு என்ற வகையில் சேராது என்றாலும் இவ்வகை அச்சங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவல்லவை. உதாரணமாக, ஸைனோபோபியா என்பது வெளிநாடு மற்றும் அந்நியர் மீதான அச்சம். இது இனவெறியாகவும் பாசிசமாகவும் மாறக்கூடியது. இஸ்லாமோபோபியா இன்று உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தீவிரவாதச் செயல்களுக்கு அடிப்படையாக இருப்பது இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாமியர் மீதான காரணமற்ற அச்சவுணர்வு. ஆப்ரோபோபியா எனும் ஆப்பிரிக்கர் மீதான அச்சவுணர்வு, இண்டோபோபியா எனும் இந்தியர் மீதான அச்சவுணர்வு என இதில் பலவகை உள்ளன.

Related Stories:

>