×

மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, டெல்லி எல்லையில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 4  மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு  ஏற்படவில்லை. இதையடுத்து குடியரசு நாளான நேற்று, விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

‘கிழக்கு டெல்லி, முகர்பா சவுக், காசிபூர், சீமாபுரி, டிக்ரி பார்டர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 8 அரசு பஸ்கள், 17 தனியார் வாகனங்களை விவசாயிகள் அடித்து நொறுக்கியுள்ளனர். பயங்கர ஆயுதங்களால் விவசாயிகள் தாக்கியதில் 86  போலீசார் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்’ என்று டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பேரணியின் போது நடந்த கலவரம், வன்முறை சம்பவங்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒருங்கிணைந்த  விவசாய சங்கங்களின் அமைப்பு) பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கலவரச் செயல்களில் ஈடுபட்டது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, பயங்கர ஆயுதங்களால் அரசு ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2-ம் நாளாக இன்றும் டெல்லியில் இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 12 மணி முதல் டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நீடிப்பதால் 20 கம்பெனிகள் அடங்கிய துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வி.எம்.சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வி.எம்.சிங், அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு எம்எஸ்பி உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும், ஆனால் எதிர்ப்பு என்னுடன் இந்த வடிவத்தில் செல்லாது. மக்களை தியாகம் செய்யவோ அல்லது அடிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை என்றார்.

வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க முடியாது. எனவே, நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால், வி.எம்.சிங் மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்திலிருந்து இப்போதே விலகிக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

பாரதிய கிசான் யூனியனின் தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், நேற்று டெல்லியில் என்ன நடந்தாலும் நான் மிகுந்த வேதனையடைகிறேன். எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்றார். டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்று வரும் 41 விவசாயிகள் கூட்டமைப்பில், 2 விவசாய சங்கங்கள் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : unions , Did not come to sacrifice the people: 2 agricultural unions withdraw from the struggle against agricultural laws. !!!
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...