ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மெரினா கடற்கரையில் குவிந்ததால் சென்னை முழுவதும்  பல மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். ஆம்புலன்சும் சிக்கியது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக  தொண்டர்கள் லட்சக்கணக்கில் தங்களது வாகனங்களில் நேற்று இரவு முதல் சென்னை நோக்கி படையெடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலையில் இன்று காலை 10  மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் வரை மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், வெளி மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்  நிறுவனத்துவதற்கு எந்த வித ஏற்பாடுகளும் போக்குவரத்து போலீசார் செய்யவில்லை. இதனால், மெரினா காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகளில் ஆங்காங்கே அதிமுகவினர் தங்களது வாகனங்களை  நிறுத்திவிட்டு நினைவிடத்திற்கு சென்றுவிட்டனர்.

இதனால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் காலையில் வேலைக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டனர். மாநகர பேருந்துகளும் நத்தை வேகத்தில் ஊர்ந்து  சென்றது. ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடக்க 1 முதல் 2 மணி நேரம் கடந்தது. வெளிமாவட்ட பேருந்துகள் அனைத்தும் மாநகரத்திற்குள் போக்குவரத்து போலீசார் அனுமதித்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலை,  தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, வடபழனி 100 அடி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அதேபோல், கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, ஓஎம்ஆர் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, அண்ணாசாலை,  அடையார், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை, ஆயிரம்விளக்கு மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களையும் மாநகரத்திற்குள் போக்குவரத்து போலீசார் அனுமதித்ததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். நினைவிடம்  திறப்பு விழாவிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையாக ஏற்பாடுகள் செய்து இருந்தால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்காது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு மெரினா கடற்கரை சாலைகள் அனைத்தையும் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நுழைய தடை வித்தனர். ஆனால் நினைவிடம் திறப்பு விழாவிற்கு வந்த வாகனங்களையும்  போக்குவரத்து போலீசார் உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால் அதிமுகவினர் தங்களது வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதுவே மாநகர முழுவதும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நினைவிடம் திறப்பு விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்றதால் அவர்களுக்கு பாதுகாப்பு பணிகளை மட்டும் போலீசார் ஈடுபட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி செல்ல போக்குவரத்து போலீசார்  எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. அனைவரும் மெரினா கமராஜர் சாலையில் தான் பணியில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து சிக்னல்களிலும் ஒன்று அல்லது இரண்டு  போக்குவரத்து போலீசார் மட்டுமே  பணியில் இருந்தனர். அவர்களால் போக்குவரத்தை முறையாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு வந்த அனைத்து 108 ஆம்புலன்சுகளும் வாகனங்களுக்கு இடையே நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டது.

சில இடங்களில் குறிப்பாக பூந்தமல்லி நெஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால்  ஆம்புலன்சில் இருந்த நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர். தனியார் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர். வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருந்ததால், இரு சக்கர  வாகனங்களில் வந்தவர்கள் அவதிப்பட்டனர்.

Related Stories: