×

அரசு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: குடியரசு தின விழாவில் ஆளுநர் வி.ஆர்.வாலா பேச்சு

பெங்களூரு: மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று அரசாங்கம் எடுத்த முயற்சியால் கட்டுக்குள் இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் வி.ஆர்.வாலா கேட்டுக்கொண்டார். நாட்டின் 72வது குடியரசு தினம் பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் விஆர் வாலா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதை ஏற்றுகொண்டார். பின்னர் அவர் உரையாற்றும்போது, மாநில அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை எடுக்க மேற்கொண்ட முயற்சி காரணமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மாநில அரசு கொரோனா தொற்று சமயத்திலும் பல துறைகள் மூலம் மேற்கொண்டுவரும் வளர்ச்சி பணிகள் பாதிக்காமல் பார்த்து கொண்டது சிறப்பம்சமாகும். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேற்கொண்ட வசதிகள், நோயாளிகளின் தேவைகளுக்காக வென்டிலேட்டர், பிபிஇ கிட் தயாரித்து வழங்கியதும் சிறப்பாகும்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசும் கோவிட்-19 தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டது. அதன் காரணமாக பல வல்லரசு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மத்திய அரசின் ஆத்ம நிர்பார பாரத் திட்டம் மக்களுக்கு நல்ல பலன் கொடுத்து வருகிறது.  கொரோனா தொற்று காலத்தில் பொருளாதாரத்தில் பல வழிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண பணிகள் சிறப்பாக வழங்கப்பட்டது. மேலும் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசிகள் போடும் திட்டம் கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சுகாதார துறையில் பணியாற்றுவோருக்கு போடப்படும் தடுப்பூசிகள் நாட்டின் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் கொரோனா தொற்று காலத்தில் போராளிகளாக இருந்து செயல்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார், ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் தான் எங்கள் அனைவருக்கும் ஹீரோக்களாக இருக்கிறீர்கள். உங்கள் பணியை தொய்வு இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தொற்று குறைந்து விட்டது என்பதால் மக்கள் யாரும் அலட்சியமாக இல்லாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாநிலத்தில் கொரோனா தொற்றால் பொருளாதார இழப்பு சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 23 மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.  கர்நாடக மாநில சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தொற்று கண்டறிதல், உடனடியாக சிகிச்சை, தொற்று அடையாளம் காண தொழில்நுட்ப வசதி பயன்படுத்தல் போன்ற திட்டங்கள் மூலம் நாட்டில் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோவிட் வார்ரூம், குவாரன்டைன் பகுதியை நிர்வாகம் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. மாநிலத்தில் கடந்தாண்டு கொரோனா மற்றும் வெள்ள பெருக்கு சமயத்தில் பிழைப்பு தேடி பெங்களூரு வந்திருந்த 16 லட்சத்திற்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலனுக்காக மாநில அரசு 824.24 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தினருக்கு பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி, தானியங்கள் வழங்கப்பட்டது. கிராமபுறங்களில் 6,544 பிஎம்சி மையங்கள் திறக்கப்பட்டது. சுமார் 6,439 ஊழியர்கள் இப்பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் கல்புர்கி மற்றும் சிஞ்சோளியில் உள்ள ஏபிஎம்சி மையங்களை மத்திய அரசு இ-நார்ம் பிளாட்பார்ம் திட்டத்தில் இணைத்துள்ளது’’ என்றார். விழாவில் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைமை செயலாளர் பி.ரவிகுமார், மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி பிரவீன்சூட், மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

வேளாண் தொழிலில் தொழில்நுட்பம்
மாநிலத்தில் 75 சதவீதம் வேளாண் தொழில் மழையை நம்பி இருக்கிறது. ஆகவே மாநில அரசு வேளாண் தொழில் சார்ந்த பகுதிகளில் நீர் ஆதாரம் ஏற்படுத்தும் வகையில் நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். பிற தொழில்களில் தொழில்நுட்ப வசதி பயன்படுத்துவது போல், வேளாண் தொழிலிலும் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பயிர் சர்வே நடத்த வேண்டும். கிராமபுறங்களில் உள்ள இளைஞர்களை பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்த வேண்டும். மேலும் பிரதமர் பசல் பீமா திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி சுலபமாக கிடைக்க வழி காண வேண்டும் என்று ஆளுநர் கூறி
னார்.

Tags : Governor ,celebrations ,speech ,Republic Day ,VR Wala , People should be cautious even if the corona is under control due to government action: Governor VR Wala's speech at the Republic Day function
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,536,467 பேர் பலி