×

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா என்பது நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதல்வராக இருக்கிற பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா நினைவிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்துவிட்டு,  இப்படிச் சொன்னார்.
இவரின் வாயை அடைப்பதற்காகவும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பழனிசாமியால் அமைக்கப்பட்டது. விசாரணைக் கமிஷன் அமைத்துவிட்டார்கள் என்று சொல்லித் தான், அதில் நிறைவடைந்து, பதவிக்காக ஓடிப்போய் பழனிசாமியுடன் மறுபடியும் சேர்ந்து கொண்டார் பன்னீர்செல்வம். அதற்காகவே அவருக்கு, துணை முதலமைச்சர் பதவி பரிசாகத் தரப்பட்டது. துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது.

மூன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா  மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க இவர்கள் முயலவில்லை. ஜெயலலிதா தான் மரணம் அடைந்துவிட்டாரே, அதனால் தானே நமக்கு உயர்பதவிகள்- உல்லாச வாழ்க்கை என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். ஜெயலலிதா படத்தைச் சட்டைப் பாக்கெட்டிலும், மேஜையிலும் வைத்துக் கொண்டு, அம்மாவின் அரசு என்று மூச்சுக்கு முந்நூறு முறை  சொல்லியே அனைவரையும் ஏமாற்றினால் போதும் என்று எண்ணிவிட்டார்கள். தங்களுக்குப் பதவி கொடுத்து,  அரசியல் வாழ்க்கை பிச்சை போட்ட ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டு, இன்று பதவியை நன்றாக அடி முதல் நுனிவரை அனுபவித்து வருகிறார்கள்.இதோ இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நாட்டு மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று இறங்கி இருக்கிறார்கள்.

ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதான மரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும். அதைச் செய்து விட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதைச் செய்யவில்லை.2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் ஜெயலலிதாவின் நினைவகம் திறக்கப்படுவது அந்த ஜெயலலிதாவுக்கே செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அதிமுக தொண்டர்கள்  ஜெ. விசுவாசிகள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை -கொள்ளைக்குக் காரணமானவர்கள் என அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு இத்தருணத்தில் மீண்டும் வழங்குகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : DMK , Jayalalithaa Memorial Opening Ceremony Thanksgiving Drama: DMK Leader MK Stalin's Statement
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்...