பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டு

கோவை: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தனியார் விடுதிக்கு சென்ற அவர், பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாளை (105) சந்தித்தார். அவருக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டினார். பாப்பம்மாள் கூறும்போது, ‘‘விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது போன்ற விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது விவசாய தொழில் மேம்படும். இந்த விருது மூலம் உலகமே என்னை பற்றி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது அனைத்து விவசாயிகளுக்கான கவுரவம். இந்த விருது பலரையும் இயற்கை விவசாயத்துக்கு திருப்பிவிடும் என நினைக்கிறேன்’’ என்றார்.

Related Stories:

>