டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

திருச்சி: புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டாவில் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர், டூவீலர் பேரணி நடத்தினர். எல்லைகளில் போலீஸ் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடந்தது. அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் எம்ஜிஆர் சிலை அருகே திரண்ட விவசாயிகள், கட்சியினர் இருசக்கர வாகன பேரணியை துவக்கினர்.  அவர்களை வழியிலேயே போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருடன்  தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல்  மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து தேசிய தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள்  30 டிராக்டர்களில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி  வந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் டிராக்டர்களை சாலையில்  நிறுத்திவிட்டு ரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.   

மணப்பாறையிலிருந்து தேசிய ெதன்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் 7 டிராக்டர்களில் திருச்சி நோக்கி சென்றனர். ராம்ஜிநகர் அருகே அவர்களை போலீசார் தடுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நடுரோட்டில் 5 டிராக்டர்களை  நிறுத்திவிட்டு 2 டிராக்டர்களில் வேறு பாதையில் விவசாயிகள் நகருக்குள்  சென்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையிலிருந்து வந்த 3 டிராக்டர்களை  கள்ளிக்குடி மார்க்கெட் அருகே போலீசார் மறித்தனர். லால்குடி, முசிறியில் பேரணி  நடந்தது. நாகையில் புத்தூர் ரவுண்டானாவிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு டிராக்டருடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பேரணியாக சென்றனர். போலீசார் தடுத்ததால் பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் புது பஸ் நிலையத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணி நடத்த இருந்தவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதேபோல், தஞ்சை, ஒரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் எல்லைகளில் தடுத்து நிறுத்தினர். புதுக்கோட்டை நகருக்குள் வரவிடாமல் ஆங்காங்கே  போலீசார் தடுத்ததால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மேற்கு வானொலி   திடலில்  தேசிய கொடியுடன் பேரணி துவங்கியது.  போலீசார்  கயிறு கட்டி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் எல்லைகளிலே விவசாயிகளை டிராக்டர்களுடன் தடுத்தனர். கரூரில் இருசக்கர வாகன பேரணியை போலீஸ்   தடுத்ததால் மறியல் நடந்தது. தடையை மீறி பேரணி நடத்தியதாக ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை:  கோவை அவினாசி சாலை தண்டு மாரியம்மன் கோயிலில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள், கையில் காய்கறிகள், வாழை மரங்கள், பழங்கள் மற்றும் மோட்டார் பம்ப் செட்டுகளை ஏந்தியபடி வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சிவகங்கையில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் டூவீலர் பேரணி நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், விருதுநகர் எம்ஜிஆர் சிலையிலிருந்து விவசாயிகள்  டிராக்டர்கள், 300க்கும் அதிகமான டூவீலர்களில் தேசிய கொடியேந்தி பேரணி சென்றனர். திண்டுக்கல்லில் விவசாயிகள் பேருந்து நிலையத்திலிருந்து டூவீலர், ஆட்டோவில் தேசியக்கொடியை கட்டியபடி பேரணி சென்றனர். தேனியில் டூவீலர் பேரணி நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில் தடைைய மீறி, 25க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் நகருக்குள் நுழைந்தன. அதேபோல், அண்ணா நுழைவாயில் அருகே 300க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் திரண்டனர். டிராக்டர்களை வழியில் தடுத்த போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

Related Stories:

>