மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும்” என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொது செயலாளர் துரைமுருகன்,  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * திமுக சார்பில் டெல்லிக்குச் செல்லும் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் என்றைக்குமே தமிழக நலனுக்காகப் பாடுபடுவதோடு- தமிழக மக்களின் பிரச்னைகளை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கபூர்வமாக எதிரொலித்து-தங்களுக்குள்ள ஜனநாயகக் கடமையை திறம்பட நிறைவேற்றி வந்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக பங்கேற்றிருந்த போது- தமிழகத்திற்கு தொழிற்சாலைகள்-நடைபெற்ற தகவல் தொழில் நுட்பங்கள் கொண்டு வரப்பட்டது.  

திமுக மத்திய அரசில் பங்கேற்ற நேரத்தில் செய்த சாதனைகளினால்தான்,  தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையும்-பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையும்  தொழிற்சாலைகளாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக- அனைத்துப் பிரச்னைகளிலும் பிரதான எதிர்க்கட்சியாகவே- ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பொறுப்புமிக்க ஜனநாயகக் கடமையின் ஓர் அங்கமாக-2019லிருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை-எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சாதித்த சில முத்தான சாதனைகள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி-2 கோடி கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்தது, மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இரு அவைகளிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சட்டங்களுக்குத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டத்தை இரு அவைகளிலும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தது திமுக. மேகதாது அணை விஷயத்தில் பிரதமரை நேரில் சந்தித்து,  தமிழகத்தின் கருத்தை அறியாமல் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்க வைத்திருக்கிறோம்.

அஞ்சல் துறைத் தேர்வுகளைத் தமிழில் நடத்த முடியாது என்ற மத்திய அரசின் முடிவை இருமுறை திரும்பப் பெற வைத்தது, தென்னக ரயில்வேயில் அதிகாரிகளுக்குள் இந்தியில் மட்டுமே கடிதப் போக்குவரத்துச் செய்துகொள்ள வேண்டும் என்பதைத் திரும்பப் பெற வைத்தது. தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தை மைசூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிட வைத்துள்ளோம். பிரதமரின் கூட்டத்திலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுக என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார். இலங்கை தமிழர்களுக்கான மாகாண கவுன்சில் ஒழிக்கப்படும் என்றதும் முதலில் குரல் கொடுத்தது திமுக தான். இவை அனைத்தும் திமுக-ஆளும் பாஜவிற்கு எதிர்க் கட்சியாக இருந்து சாதித்தவை. தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுக எம்.பி.க்களைப் பார்த்து - அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாகவே இல்லாமல்-ஆளுங்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் சாதிக்கும் திமுக எம்.பி.க்களைப் பார்த்து தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பும் முதல்வர் பழனிசாமிக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும்-புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக உறுப்பினர்கள் வலிமையாக குரல் கொடுப்பார்கள்.  திரும்பப் பெறும் வரை திமுக உறுப்பினர்களின் போராட்டம் நீடிக்கும். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட ரயில், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட துறைமுக திட்டங்கள், சேதுசமுத்திரத் திட்டம் ஆகியவற்றை மத்தியில் அமைந்த பாஜ அரசு செயல்படுத்தாமல் தமிழக மக்களை புறக்கணித்து வருகிறது. “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம்” என்று அறிவித்து விட்டு இன்றுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும்-ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில்கூட - மத்திய அரசு  இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியைக் கூட பறித்து - பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கும் மத்திய பாஜ அரசுகக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.  தமிழகத்தின் உரிமைகளை, தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்திடவும், தொடர்ந்து பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: