60 தொகுதி கேட்டு தொடர் பிடிவாதம் பாஜவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம்: தோல்வியை சந்திக்கும் தொகுதிகள் கணக்கெடுப்பு

சென்னை: தொடர்ந்து அதிக தொகுதி கேட்டு பிடிவாதம் பிடிப்பதால் பாஜவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம் வகுத்துள்ளது. திமுக முக்கிய தலைவர்களின் தொகுதிகள், எதிர்கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளாக பாஜவுக்கு வழங்க அதிமுக பட்டியல் தயாரித்து வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து கடந்த மக்களவை தேர்தலில் பாஜ ேபாட்டியிட்டது. தொடர்ந்து வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்ற ேகள்வி எழுந்தது. அந்த அளவுக்கு அதிமுகவுக்கும் பாஜவுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என முதலில் பாஜ போர்க்கொடி தூக்கியது. தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக முடிவு செய்ய முடியாது. டெல்லி ேமலிடம் தான் அறிவிக்கும் என்று அடுத்தடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமித்ஷா பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். பாஜ சார்பில் 100 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இருந்து நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் பட்டியலை அளித்தார்.

இதனை அதிமுக தரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற சிறிய கட்சிகளுக்கு நாங்கள் சீட் ஒதுக்கி விடுகிறோம் என்றும் அமித்ஷா வற்புறுத்தினார். அதற்கும் அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை. 30 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட அதிகமாக வழங்க முடியாது என்பதில் அதிமுக பிடிவாதமாக இருந்தது. இதனால் அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. இரண்டாம் கட்டமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பாஜ தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. அதே நேரத்தில் தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. இதற்கு பிறகும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டை முடிக்கா விட்டால் தேர்தலை சந்திப்பதிலும், பிரசாரத்தில் ஈடுபடுவதிலும் பிரச்னை ஏற்படும்.

இந்த நிலையில் பாஜகவுக்கு சீட் வழங்குவது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை அதிமுக எடுத்துள்ளது. அதாவது பாஜவுக்கு மட்டும் 34 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நோட்டோவுடன் தான் போட்டி போடும் அளவுக்கு தான் பாஜ வளர்ந்துள்ளது. பல இடங்களில் பாஜ என்றால் மக்களுக்கு என்ன என்றே தெரியாது. ேமலும் தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறோம் என்று கூட பார்க்காமல் கெடுபிடிகளை விதித்தற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜ கேட்கும் தொகுதியை வழங்காமல், அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னணியினர் போட்டியிடும் தொகுதிகள், திமுக செல்வாக்குமிக்க தொகுதிகள், பாஜவுக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளது. பாஜவை தோல்வியடைய செய்யும் வகையில் இவ்வாறு தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக முன்னணியினர், முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுவதாக அறியப்பட்டுள்ள தொகுதிகள், பாஜவுக்கு வாக்கு வங்கி இல்லாத தொகுதிகளுக்கான பட்டியலை தேர்வு செய்யும் பணியில் அதிமுக தரப்பினர் மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இந்த அதிரடி திட்டத்தை பார்த்து பாஜ கதி கலங்கி போய் உள்ளது.

பாஜ கேட்கும் தொகுதியை வழங்காமல், அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது

Related Stories: