வியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு

* 18 சிறுமிகள் மீட்பு

* போலீசார் விசாரணை

சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில், சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 18க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி இருந்தனர். இவர்களில் ஒரு சிறுமி, கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு சிறார்களுக்கான ஹெல்ப்லைன் (1098) எண்ணை தொடர்புகொண்டு, ‘‘வியாசர்பாடி பகுதியில் உள்ள மேற்கண்ட காப்பகத்தில் நான் உள்பட பல சிறுமிகள் தங்கி உள்ளோம். இங்கு, எங்களுக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்தார். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளை மீட்டு சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்தனர்.

மேலும், சிறுமிகள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டார்களா, சிறுமிகளுக்கு எந்த மாதிரியான துன்புறுத்தல்கள் நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமிகளில் 2 பேர் கல்லூரிகளிலும், சிலர் 10 மற்றும் 12ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வட்டாரத்தில் கூறுகையில், “இந்த காப்பகத்தை நடத்தி வருபவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிறுமிகளின் வாக்குமூலம் அடிப்படையில் உண்மையிலேயே அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Related Stories: