தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ 220 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்பேரில், தலைமறைவான வடமாநில ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் லலிதா ஜூவல்லரியின் கார்ப்பரேட் கம்பெனி உள்ளது. இதன் துணை மேலாளர் முருகன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் ஒன்றை அளித்தார். அதில், எங்களின் நகைக்கடையின் தலைமை அலுவலகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் சிங் கடந்த 7 ஆண்டுகளாக தங்கி, இருப்பு கண்காணிப்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை நகைகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, 5 கிலோ 220 கிராம் தங்க நகைகள் குறைவது கண்டறியப்பட்டது. பிரவீன் சிங் 2 நாட்களுக்கு முன்பு  அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார்.

அதன் பிறகே நகைகள் மாயமாகியுள்ளது  தெரியவந்தது. மேலும், பிரவீன் சிங் தங்கியிருந்த மூன்றாவது தளத்தில் சென்று பார்த்தபோது அவரும் மாயமானது தெரியவந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே, அவரை பிடித்து, கொள்ளை போன நகைகளை மீட்டுத்தர வேண்டும், என கூறியிருந்தார். அதன்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அபிபுல்லா சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஊழியர் பிரவீன் சிங் புதுப்பிப்பதற்காக வந்த தங்க நகைகளை பிளாஸ்டிக்  டப்பாவில் வைத்து பீரோவில் வைக்காமல், பீரோவின் கீழ் வைப்பதும், பின்னர்  பீரோவின் அடியில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை ஒரு துணியில் சுற்றி கடந்த 23ம் தேதி எடுத்துச்  செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையத்திற்கு வாலிபரின் புகைப்படத்தை அனுப்பி உள்ளனர். பிரவீன் சிங்குடன் செல்போனில் தொடர்புகொண்ட நபர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான பிரவீன் சிங்கை தேடி வருகின்றனர். இதேபோல், கடந்த ஆண்டு திருச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள இதே நகைக்கடையில் கொள்ளையன் முருகன் என்பவர் சுவரை துளையிட்டு 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: