நந்தனம் வீட்டு வசதி வாரியம் - ஈவெரா கட்டிடம் குறுக்கே ரூ.485 கோடியில் அவசர அவசரமாக கட்டப்படும் உயர்மட்ட பாலம்: நிர்வாக இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்திற்கும், ஈவெரா பெரியார் கட்டிடத்திற்கும் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் ரூ.485 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அவசர அவசரமாக ெடண்டர் விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அவசர அவசரமாக ஒரு டெண்டரை வெளியிட்டிருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது. ஈவெரா பெரியார் கட்டிடம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவலகம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் இருப்பதால் இந்த திட்டம் பாதுகாப்பு இல்லாததாக கருதப்படுகிறது.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத் தும்போது சம்பந்தப்பட்ட  துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான எந்த அனுமதி தொடர்பாக ஆலோசிக்காமல் இந்த பாலம் கட்டும் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதுடன் ஊழல் குற்றச்சாட்டுகளும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்துக்காக  அலுவலகமே மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2800 வீடுகள் விற்கப்படாமல் உள்ள நிலையில் வாரியம் ரூ.1500 கோடி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஓய்வு பெற்றவர்களுக்கான ரூ.250 கோடி ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் விதிமுறைகளுக்கு முரணான ரூ.485 கோடி செலவில் இந்த திட்டம் தேவையில்லை. எனவே இந்த திட்டத்தை நிறுத்துமாறும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை கோயம்பேட்டிற்கு மாற்றும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>