×

லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் குவிந்தனர் டெல்லி பேரணியில் வன்முறை வெடித்தது

* செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் கொடி ஏற்றினர்
* 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
* போலீஸ் தடியடி, கண்ணீர் புகை வீச்சு
* விவசாயி பலி, மேலும் பலர் படுகாயம்
* முக்கிய சாலைகள் மூடல்
* இன்டர்நெட் சேவை முடக்கம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒருபுறம் குடியரசு தின அணிவகுப்பு அமைதியாக நடந்த அதேவேளையில் மற்றொருபுறம் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்து போர்களமானது. மூவர்ண கொடி பறக்கும் தேசிய அடையாள சின்னமாக கருதப்படும் செங்கோட்டையின் உச்சியில் ஏறிய போராட்டக்காரர்கள் சீக்கிய கொடியை ஏற்றிவைத்து பரபரப்பை பற்றவைத்தனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தொடர்போராட்டங்களை நடத்தி வந்த விவசாயிகள், இச்சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தினர். அரசுடன் இதற்காக நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் இருதரப்பும் தங்களது நிலைபாட்டில் உறுதியாக நின்றதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  இதையடுத்து, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அனுமதி வழங்கினர். எனினும், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே டிராக்டர்கள் சென்றுவர வேண்டும் என கூறி அதற்கான வழிதட வரைபட விவரங்களையும் விவசாயிகளிடம் வழங்கியிருந்தனர்.

மேலும், டிராக்டர் பேரணி மத்திய டெல்லிக்குள் நுழையக்கூடாது.  குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் பேரணி தொடங்க வேண்டும் என்கிற போலீசாரின் நிபந்தனைகளை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே, குடியரசு தின நாளான நேற்று காலை ராஜ்பாத் சாலையில் அணிவகுப்பு முடிந்த பின்னர்  பகல் 12 மணிக்கு மேல் டிராக்டர் பேரணி டெல்லியின் மூன்று எல்லைப்பகுதிகளில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டதற்கு மாறாக, 2 மணிநேரத்திற்கு முன்பாகவே விவசாயிகளில் சில குழுக்கள் டிராக்டர் பேரணியை தொடங்கி மத்திய டெல்லியை நோக்கி நகரத்தொடங்கினா்.பேரணியில் பங்கேற்றவர்கள் டிராக்டர், இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் குதிரைகளில் அணிவகுத்தனர். சிலர் நடந்தே வந்தனர். டிராக்டர்களில் விவசாய சங்கங்களின் கொடிகளை கட்டியவாறு பேரணியாக வந்த விவசாயிகளை டெல்லி மக்கள் மலர்தூவி வரவேற்றனர். எனினும், மத்திய டெல்லிக்குள் நுழைய தடைவிதித்து
சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில், போலீசார் அமைத்த தடுப்புகளை பார்த்த போராட்டக்காரர்கள் ஆவேசமடைந்தனர். மேலும், டிராக்டர்களுடன் முன்னேறி செல்ல முயன்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றியதையடுத்து போராட்டக்காரர்களில் சிலர் அங்குள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். இதனால்,அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். ஐடிஓ பகுதியில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி பின்னோக்கி செல்ல வைத்ததால், அவர்கள் அங்கிருந்து செங்கோட்டை நோக்கி நகர்ந்தனர். சிலர் டிராக்டர்களை செங்கோட்டை நோக்கி ஓட்டிச்சென்றனர். பின்னர் போராட்டக்காரர்களில் சிலர் செங்கோட்டையின் மீது ஏறி சீக்கியர்களின் மதக் கொடியான ‘நிஷான் சாஹிப்’  கொடியினை செங்கோட்டை உச்சியில் பறக்கவிட்டனர். இதனால் போலீசார் அங்கிருந்தவர்களை மீண்டும் தடியடி நடத்தி கலைத்தனர். ஷாதராவில் உள்ள சிந்தாமணி  சவுக்  பகுதியில் தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றனர்.  சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் கண்ணாடிகளை அடித்து  உடைத்தனர். அக்‌ஷார்தம் கோயில் மற்றும் முகார்பா சவுக் அருகே பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருடன் “நிஷாங்க்ஸ்”  குழுவை சேர்ந்த சீக்கிய  போராட்டக்காரர்கள் பலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், இந்த போராட்டத்திற்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையெனவும், சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வன்முறையில் இறங்கியதாகவும் , 41 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டியது.

மாலைநேரத்தில் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளில் பலர் மீண்டும் தங்கள் முகாமிட்டுள்ள எல்லைபகுதியை நோக்கி திரும்பி சென்றனர். எனினும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெளியேறாமல் இருந்ததையும் பார்க்க முடிந்தது.  இந்த களேபரத்தில் ஒரு டிராக்டர் கவிழ்க்கப்பட்டதில் அதிலிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்ததார். அதேபோன்று போலீசார் தரப்பிலும் 83 பேர் வரை காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, போராட்டம் மேற்கொண்டு பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க மத்திய அரசு இணையவசதியை முடக்கியது. அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டது. புறநகரிலிருந்து டெல்லிக்கு வாகனங்கள் நுழைவதும் தடை செய்யப்பட்டு முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டன. இதனிடையே,  டெல்லியின் தற்போதைய சூழல் குறித்து உள்துறை செயலர் அமித்ஷாவை  சந்தித்து விளக்கம் அளித்தார். இதனைதொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு நேற்று இரவு 12 மணியிலிருந்து அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

இன்டர்நெட் முடக்கம்
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், போராட்டம் மேற்கொண்டு பரவாமல் தடுக்க, விவசாயிகள்  முகாமிட்டுள்ள டெல்லி எல்லை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கை
போராட்டத்தை முன்னின்று நடத்தும் விவசாய சங்கங்களில் ஒன்றான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரணியை கைவிட்டு, விவசாயிகள் அனைவரையும் உடனடியாக தாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வந்த எல்லை பகுதிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். எனினும், எங்களின் எதிர்ப்பு  அமைதியான வழியில் தொடரும்.  அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் முடிவு செய்யப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் கோஷத்துடன் டிராக்டர், குதிரைகள், கிரேன்களுடன் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்
குடியரசு தினமான நேற்று விவசாயிகள் டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜெய் ஜவான், ஜெய் கிஷான் கோஷத்துடன் டிராக்டர், கிரேன்கள் மற்றும் குதிரைகளுடன் விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர். அவர்களுடன் கார் மற்றும் பைக்குகளிலும் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். வாகனங்கள் மேல் அமர்ந்தபடி தேசிய கொடி மற்றும் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏந்தியபடி விவசாயிகள் டெல்லிக்குள் ஊர்வலமாக வந்தனர். மேலும் விவசாயிகள் தேசபக்தி பாடல்களை பாடியபடி, அதற்குஏற்றார்போல் தாளமிசைத்தபடி சென்றனர். பேரணியில் கிரேன்களும் பங்கேற்றன.

வன்முறை களமான ஐடிஓ
விவசாயிகள், போலீசார் இடையே எழுந்த மோதலால் ஐடிஓ பகுதி முழுவதும் வன்முறை களமாக மாறியது. விவசாயிகள் ஐடிஓ வழியாக லுட்டியன்ஸ் பகுதிக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுப்பு பணிக்காக நிறுத்தி வைத்திருந்த பஸ்களை டிராக்டரால் மோதி கவிழ்த்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் மாறியதை கண்ட போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் விவசாயிகளை கட்டுப்படுத்த முயன்றனர். விவசாயிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஐடிஓ பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகள் பேரணியால் எழுந்த வன்முறையால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் அப்படியே நின்றன. இதுபற்றி டெல்லி போலீசார் டிவிட்டரில் அனைத்து தகவல்களையும் தெரிவித்து, மக்களை உஷார்படுத்தினர்.

பூக்கள் தூவி விவசாயிகளை வரவேற்ற டெல்லி மக்கள்
டெல்லி வீதிகளில் நேற்று விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவர்களை வரவேற்றனர். மேலும் பேரணியை காண வீடுகளின் மேற்கூரைகளிலும், பால்கனிகளிலும், மாடி வீடுகளிலும் அவர்கள் திரண்டனர். பேரணியாக வந்த அவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றனர். பல இடங்களில் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. காசிப்பூர் எல்லையில் இருந்து ஆனந்தவிஹார் வழியாக வந்த விவசாயிகளுக்கு ரயில்நிலைய பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து பேரணியில் பங்கேற்றனர். முட்க்கா கிராமத்திலும் இதுபோன்ற உற்சாக வரவேற்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர் அனிதா பட்வால் கூறுகையில்,’ இதுபோன்ற டிராக்டர் பேரணியை நான் பார்த்ததே இல்லை. புதிய இந்தியாவை பார்த்தது போல் உள்ளது. இதைநான் வீடியோவாக பதிவு செய்து எனது பேரக்குழந்தைகளுக்கு காட்டுவேன்’ என்றார். பொதுமக்கள் பலரும் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.


கூடுதலாக 20 கம்பெனி துணை ராணுவப்படை: அமித்ஷா உத்தரவு
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட நகரில் கூடுதலாக 15 முதல் 20 கம்பெனிகள் அடங்கிய துணை ராணுவப்படையை களமிறக்கி கண்காணிப்பில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட  ஆலோசனை  கூட்டத்திற்கு பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உள்துறை செயலர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர்

Tags : rally ,millions ,Delhi , Millions of farmers gathered with tractors Violence erupted at the Delhi rally
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி