தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாதம் இறுதியில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக தமிழகத்தில்  பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு முடிந்த பிறகே மே மாதம் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜனவரி 18ம் தேதி பிறகுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதுவும், 10 மற்றும் 12ம் வகுப்புகள்  மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. 9 மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மே இறுதியில் தான் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்புள்ளது.

அதனால், மே மாதத்திற்கு முன்பாக தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள  234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை தயாராக வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 12 மாவட்டங்களில் இந்த பணிகள் முடிவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்தும் தயாராகிவிடும் என்று  தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையர் விரைவில் தமிழகம் வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும்  அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (கலெக்டர்களுக்கும்) அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும்  தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் உங்கள் பார்வைக்கு (கலெக்டர்கள்) தெரியப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அந்தந்த பகுதியில் உள்ள துணை கலெக்டர்கள், உதவி கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி தேர்தல்  நடத்தும் அதிகாரியாக அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார், சிறப்பு தாசில்தார் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு பகுதிகளுக்கு துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவல்கள், தமிழக அரசின் அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>