கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்

திருவனந்தபுரம்: கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்க இலாகா பதிவு செய்த கடத்தல் வழக்கு மற்றும் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட கருப்பு பணமோசடி வழக்கில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் உயர்நீதிமன்றமும், கடத்தல் வழக்கில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றமும் ஜாமீன் வழங்கின. 60 நாட்கள் ரிமாண்டில் இருந்த பின்னரும் சுங்க இலாகா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதால், பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வெளிநாடுகளில் டாலர்களை கடத்தியதாக சிவசங்கர் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. டாலர்கள் கடத்தல் வழக்கில் சிவசங்கரை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சுங்க இலாகா தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடக்கிறது. அப்போது சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் மேனன் ஜாமீன் வழங்கிய போதிலும், இந்த குற்றத்தில் சிவசங்கரின் பங்கு குறித்து எந்த சந்தேகமும் இல்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட 89 நாட்களுக்கு பிறகு சிவசங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020 அக்டோபர் 28ம் தேதி சிவசங்கரின் முன்ஜாமீன் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதே நாளில் சிவசங்கரை மத்திய அமலாக்கத்துறை கைது செய்யது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>