×

அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!

பெங்களூரு: சிறையில் இருந்து நாளை விடுதலையாகும் சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு சமீபத்தில் திடீரென்று ரத்த அழுத்தம், மூச்சு திணறல், சளி தொல்லை, தொடர் காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூருவில் விக்டோரியா அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேனில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. சிகிச்சைக்காக கொரோனா வார்டில் உள்ள ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சசிகலா கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் இந்த அறிக்கையால் சசிகலா நாளை விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரை விடுதலை செய்வதற்கான பணிகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், 4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார். மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் நாளை காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து பெறுகின்றனர். சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்ததும் நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்.

இந்நிலையில், நாளை விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது போல் அதிக தொண்டர்களை கொண்ட சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை செயலாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : volunteers ,Central Interior ,Sasikala. , There are more volunteers: Request to the Central Interior to provide Z-plus security to Sasikala. !!!
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!