இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்

டெல்லி : இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள தாம் ஆவலாக இருந்ததாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தவாழ்த்துச் செய்தியில், தன்னால் குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாமல் போனது பற்றியும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலகின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஜனநாயகம், இந்தியா. எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது.

கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விநியோகிக்க எங்கள் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இங்கிலாந்து, இந்தியா மற்றும் பல நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி. நாங்கள் கொரோனாவுக்கு எதிரான வெற்றிக்கான பாதையில் செல்கிறோம். எனவே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதையும், எங்கள் நட்பை வலுப்படுத்துவதையும், பிரதமர் மோடியும் நானும் சாதிக்க உறுதியளித்திருப்பது, எங்கள் உறவில் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் உள்ள அனைவருக்கும், இங்கு இங்கிலாந்தில் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான குடியரசு தினமாக வாழ்த்துகிறேன் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: