×

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருதினை பெற்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!!

சென்னை : மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா  விருதினை பெற்ற அனைவருக்கும்  தமிழ்நாட்டு மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்தினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி மு. பழனிசாமி  அவர்களின் வாழ்த்துச்செய்தி -

தேனினும் இனிமையான தனது குரலால் தமிழ்நாட்டு மக்களை மட்டுமன்றி இந்திய மக்களையும் கவர்ந்த பிரபல திரைப்பட பாடகரும், திரைப்பட நடிகரும், எஸ்.பி.பி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த பாடகர் திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை அவர்களின் விளையாட்டு திறனை அங்கீகரித்து, அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வில்லிசை வேந்தர் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள் வில்லுப் பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற தமிழ் அறிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கி,  தமிழ் மொழிக்கு  அரும் பணி ஆற்றி வரும் பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

தொழில் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாக, வயது முதிர்ந்த போதிலும் விவசாயம் செய்யும் கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி பாப்பம்மாள் அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.புகழ் பெற்ற கர்நாடக இடைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் இசைச் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது. ஓவிய கலைத்துறையில் சிறந்து விளங்கிய மறைந்த ஓவியர் திரு. கே.சி சிவசங்கர் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக  மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.கரூரைச் சேர்ந்த திரு. மாராச்சி சுப்புராமன் அவர்களின்  சமூக சேவையினை பாராட்டி அவருக்கு  மத்திய அரசு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

மருத்துவத் துறையில், சிறப்பாக பணியாற்றி, ஏழை, எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருத்துவம் அளித்த மறைந்த டாக்டர் திருவேங்கடம்  வீரராகவன் அவர்களின் சேவையினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அறிவித்துள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. ஸ்ரீதர் வேம்பு அட்வெண்ட்நெட் என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய தொழில் வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக அறக்கட்டளையின் நிறுவனருமான மறைந்த திரு. சுப்பிரமணியன் அவர்களின் சமூக சேவையினை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது.

இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ஹவில்ததிரு. பழனி அவர்களுக்கு மத்திய அரசின் விருதான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா  விருதினை பெற்ற இவர்கள் அனைவருக்கும்  தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும்  வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,recipients ,Tamil Nadu ,Central Government ,Padma Shri ,Padma Vibhushan , Chief Palanisamy, congratulations
× RELATED 11 இடங்களில் இன்று வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்