டெல்லி செங்கோட்டை கொடி கம்பத்தில் விவசாயிகளின் கொடி....! தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் குவிப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறை தலைமை அலுவலகத்தை சுற்றிலும் விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் செங்கோட்டையை வந்தடைந்துள்ளார். டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்துள்ளதால் ஆப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

தற்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்துள்ளனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில் குடியரசு தின விழா முடிந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே விவசாயிகள் டிராக்டர் பேரணி செங்கோட்டைக்குள் நுழைந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். மேலும் டெல்லியில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தடுப்புகளை மீறி செங்கோட்டைக்குள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் புகுந்துள்ளனர். டெல்லி செங்கோட்டையில் விவசாய சங்க கொடியை விவசாயிகள் ஏற்றியுள்ளனர்.

Related Stories: