மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் வழிந்து அருகில் உள்ள குளம், குட்டை, மழைநீர் வடிகாலில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கி வருகிறது. மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளில் குறைந்தபட்சம் 15 வார்டுகளின் நிலைமை இதுபோல் தான் உள்ளது.

மயிலாடுதுறை கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வஉசி தெருவின் மேற்குபுறத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் இணைப்பு சாலை உள்ளது. 50 மீட்டர் தூரம் உள்ள அந்த சாலை சேதமடைந்தே காணப்படுகிறது. வஉசி தெருவில் உள்ள ஆள்நுழைவு தொட்டியிலிருந்து வெளியேறிய கழிவுநீர் மேற்கு பகுதியில் தேங்கியதால் குடியிருப்பு வளாகம் மற்றும் அப்பகுதியில் குடியிருப்போர் யாரும் சாலையில் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளுக்கு போன் செய்தால் அவர்கள் எடுப்பதில்லை.

சுகாதாரம் என்று அடிக்கடி பேசும் நகராட்சி நிர்வாகம் கடந்த 3 மாதமாக வீதியில் நடமாட முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கியுள்ளதை அகற்றவோ, அந்த கழிவறை நீர் வெளியேறாமல் தடுக்கவோ முன்வரவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பவே மக்கள் அச்சப்படுகின்றனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் வந்த பிறகாவது இதுபோன்ற சங்கடங்கள் தீரும் என்றால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே வஉசி தெருவுக்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: