பேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல்

பேட்டை : கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஏஜென்சிகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே சென்றாலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அரசு, சிலிண்டருக்கு உரிய விலை நிர்ணயம் செய்து தனியார் ஏஜென்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வரும் காஸ் சிலிண்டருக்கான பில்லிங் தொகையை டெலிவரி செய்ய வரும் நபரிடம் கஸ்டமர்கள் செலுத்தி பெற்று கொள்வர். பில்லிங் தொகை தவிர மாடிகளில் ஏற்றி இறக்க வேண்டிய சூழலில் மக்களே கூடுதலாக பத்து அல்லது இருபது ரூபாய் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் பேட்டை, கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு பில்லிங் தொகை தவிர கூடுதலாக 65 ரூபாய் கேட்டு அடாவடி வசூல் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் வேறு வழியின்றி, மறுமுறை சிலிண்டர் வழங்குவதில் தாமதித்து விடக்கூடாது என்று எண்ணி கேட்கும் கூடுதல் தொகையை கொடுத்து பெறுகின்றனர். டெலிவரி பாய்களின் இந்த அடாவடி வசூலால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு காஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் நபர்கள், ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

>