பண்பொழி தைப்பூசத் திருவிழாவில் முருகர், சண்முகர் எதிர்சேவை

செங்கோட்டை :   செங்கோட்டை அடுத்த  பண்பொழி திருமலை குமாரசாமி கோயில் தைப்பூச திருவிழாவின் 7ம்நாளை யொட்டி முருகர், சண்முகர் எதிர்சேவை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். செங்கோட்டை அடுத்த  பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இக்கோயிலில் இருந்து பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலுக்கு முருகப்பெருமான அழைத்துவந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தி திருவிழா கொண்டாடப்படும்.  

இதன்படி இந்தாண்டுக்கான தைப்பூசத் திருவிழா பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து திருவிழா நாட்களில் தினமும் மான், பசு, சிம்மம், ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் நாளையொட்டி முருகர்,  சண்முகர் எதிர்சேவை காட்சி நடந்தது. இதையொட்டி காலை 9  மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமலை குமாரசுவாமி பண்பொழி ரத வீதிகளில் கோ ரதத்தில் வீதியுலா நடந்தது. பின்னர் ஐந்து புளி மண்டபத்தில் 9.30க்கு சண்முகர் அழைப்பு உபசாரம் நடந்தது. மதியம் 1 மணிக்கு இரட்டைச் சப்பரத்தில் முருகர், சண்முகர் பவனி வந்து பக்தர்களுக்கு எதிர்சேவைக் காட்சியளித்தனர்.

இதையொட்டி நாட்டாண்மை கிருஷ்ண தேவர், மெடிக்கல் முருகையா, ஜோதிமுருகன்,  சுப்பையாகண்ணு, ஆதீனத்தேவர், கரிசல் வேலுச்சாமி, வடகரை ராமர், பாஜ ஒன்றியத்  தலைவர் ஐயப்பன், சண்முககுமார் மற்றும் பண்பொழி, தேன்பொத்தை, கரிசல் குடியிருப்பு, திருமலைக்கோயில் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தரிசித்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு பண்பொழி ரத வீதிகளில் இரட்டைச் சப்பரத்தில் முருகர், சண்முகர் வீதியுலாவை தொடர்ந்து அதிகாலை  1 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அருணாசலம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கிருஷ்ணாபுரம் அருணாச்சலம் செய்திருந்தனர்.

Related Stories:

>