வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்குமா? தென்னையை தாக்கும் நோய்களால் மகசூல் பாதிப்பு

தேங்காய்களில் நீர்பேடு அதிகரிப்பு

*குரல் அற்றவர்களின் குரல்

நாகர்கோவில் :  தென்னையை தாக்கும் நோய்கள் காரணமாக மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களில் நீர்பேடு அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக இருந்து வருகிறது. கடைவரம்பு பகுதிகளில் நெல் வயல்களில் தண்ணீர் கிடைக்காத நிலையால் பல பகுதிகளிலும் விவசாயிகள் நெல் சாகுபடியில் இருந்து தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். தென்னையில் குருத்துப்பூச்சி தாக்குதல் காரணமாக குருத்து அழுகுதல், சாறுவடிதல், தஞ்சாவூர் வாடல்நோய், கேரள வாடல் நோய், இலை கருகுதல், இலைப்புள்ளி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் மித மிஞ்சிய அளவில் ஏற்படுகிறது.

வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு இலைசாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் தென்னை ஓலை மட்டைகள் கறுத்து பச்சையம் இழப்பதால் மகசூலும் பாதிக்கப்படுகிறது. இதில் கடுமையாக பாதித்த மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த பிரச்னை இருந்த போதிலும்  குமரி மாவட்ட தென்னை தோப்புகளில் இருந்து வெள்ளை ஈயை முற்றிலுமாக ஒழிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசியும் பலன் இல்லாத நிலை உள்ளது.

இதனால் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் தென்னந் தோப்புகளில் தேங்காய் உற்பத்தி கணிசமாக சரிந்துள்ளது. மேலும் விளைந்த தேங்காய்களில் பேட்டு தேங்காய் என்று அழைக்கப்படும் நோய் பாதித்த தேங்காய்கள் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கிறது. அழுகல் தேங்காய்களும் அதிகம் விளைகிறது. இது விவசாயிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் தேங்காய்கள் தரமற்றதாகவும் மாறியுள்ளது. நோய் தாக்குதல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் கூறும் ஆலோசனைகள் பலன் அளிக்காத நிலை உள்ளதாகவும், மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகளை கேட்டபோது, வெள்ளை ஈயை கட்டுப்படுத்த என்கார்சியா என்ற ஒட்டுண்ணி இயற்கையாகவே உள்ளது. பூச்சி மருந்துகள் பயன்படுத்தும் போது முதலில் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்பட்டது போன்று தென்பட்டாலும் இயற்கை எதிரிகள் பூச்சிக்ெகால்லிகளால் அழிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவில் வெள்ளை ஈக்கள் இன விருத்தி மேற்கொண்டு தென்னை பயிரினை சேதப்படுத்துவதால் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தோ அல்லது அசாடிராக்டின் என்ற வேம்பு சார்ந்த பூச்சி கொல்லியை பயன்படுத்தலாம். மேலும் மஞ்சள் ஒட்டுபொறி வைத்து வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.

ஹெக்டேருக்கு 20 எண் மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் 1000 எண் கிரைசோபெர்லா ஒட்டுண்ணியை வைத்தும் கட்டுப்படுத்தலாம். அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தென்னையில் வெள்ளை ஈக்ககளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காப்பீடு செய்து பயன் பெறலாம்

இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4ம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7ம் ஆண்டு முதலும் 60 ஆண்டுவரையில் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்கள் வரை காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு a2.25, 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு a3.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு கிடைக்கும் காப்பீடு தொகை மரம் ஒன்றுக்கு a900ம், 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு a1750 ஆகும். இது தொடர்பாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்’ என்றனர்.

தென்னையை தாக்கும் 800 பூச்சிகள்

தமிழகத்தில் தென்னை மீதான தாக்குதலில் 800 விதமான பூச்சிகள் பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிவப்பு கூன் வண்டு, வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு போன்றவை பெரிய அளவில் சேதம் ஏற்படுத்துகின்ற இனங்கள் ஆகும். கொய்யா, மா, வெண்டை, சப்போட்டா, மா, எலுமிச்சை உள்ளிட்ட பிற பயிர்களையும் வெள்ளை ஈ தாக்குகிறது. கூட்டம் கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் வசிக்க தொடங்குகிறது.

கிரைசொபெர்லா என்ற இரை விழுங்கிகள் வெள்ளை ஈக்களை உண்ணுவதால் அவற்றை வளர்த்தும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். ஐந்து மில்லி வேப்ப எண்ணெய், ஒரு சதவீதம் அசாடிராக்டின், 2 மில்லி சோப்பு ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஓலையின் அடிப்பகுதியில் நன்றாக நனையுமாறு தெளிக்கலாம் என்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: