சாமிதோப்பில் தை திருவிழா தேரோட்டம்-பக்தர்கள் திரளாக பங்கேற்பு

தென்தாமரைகுளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டர்  தலைமைப்பதியில் தை  திருவிழாவின் 11ம் நாளான நேற்று  தேரோட்டம் நடைபெற்றது.

 சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்  பதியில் தை  திருவிழா கடந்த 15ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் எட்டாம் நாளான கடந்த 22ம் தேதி அதிகாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலையில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டர் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும்    நடைபெற்றது.

 திருவிழாவின் நிறைவு நாளான  11ம் நாளான  நேற்று அதிகாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு அய்யா பள்ளியறைக்குள் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி  அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு  பக்தர்கள் அய்யா சிவ சிவ... அரகரா அரகரா.... என்ற பக்தி கோஷத்துடன் காவி உடை, தலைப்பாகை அணிந்து  தேர் வடத்தை இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

 தலைமைப்பதி முன்பிருந்து  புறப்பட்ட தேரானது சாமிதோப்பு நான்கு ரத வீதியிலும் வலம் வந்தது. வடக்கு வாசல் முன்பு திரளான பக்தர்கள் அரசின் வழிகாட்டுதல் படி சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று அய்யா வைகுண்ட சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ ,எலுமிச்சை உட்பட பல்வேறு  பழ வகைகளை சுருளாக கொடுத்து  வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். பையன் கிருஷ்ணராஜ்,  பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தேர் மாலை 5 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து இரவு தேரில் இருந்து கொண்டு அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இரவு 9 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து ரிஷப வாகன பவனியும்  நடைபெற்றது.தேரோட்டத்தை முன்னிட்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்ட அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   இன்று திங்கட்கிழமை அதிகாலை  4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related Stories:

>