பொன்னை மேல்பாடி பாலம் அருகே ₹19 லட்சத்தில் அமைத்த தார்சாலை 5 மாதத்தில் மண்சாலையாக மாறிய அவலம்

* தரமற்ற பணிகள் என குற்றச்சாட்டு

* நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

பொன்னை :  பொன்னை மேல்பாடி பாலத்தின் அருகே இணைப்பு சாலைக்கு ₹19 லட்சத்தில் அமைத்த தார் சாலை 5 மாதத்தில் மண்சாலையாக மாறியுள்ளது. இப்படி தரமற்ற சாலைகள் அமைத்து அலட்சிய பணி செய்துள்ள ெநடுஞ்சாலைத்துறை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியில் பொன்னை ஆற்றை கடக்க பாலம் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக பொன்னை, பள்ளேரி, வசூர், லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னை ஆற்றில் மேல்பாடி பகுதியில் பாலம் கட்டப்பட்டது.

இதையடுத்து பொன்னை, மேல்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே பொன்னை ஆற்றுப்பாலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேல்பாடி பகுதியில் உள்ள மற்றொரு பாலத்தினைத்தான் அனைத்து வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் மேல்பாடி பாலத்தை இணைக்கும் வகையில் ₹19 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம், பொன்னை பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக அமைந்தது. இந்த சாலையைத்தான் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி மிக முக்கியமான சாலையில், தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டு 5 மாதங்கள் கூட முழுமையாக தாக்குபிடிக்காமல், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. தார்சாலையாக அமைக்கப்பட்டது, தற்போது மண்சாலையாகவே மாறிவிட்டது.

இதற்கு காரணம் சாலை அமைக்க ஒதுக்கிய ₹19லட்சத்ைதயும் அதிகாரிகள் உரிய முறையில் செலவு செய்யாமல், கண்துடைப்புக்காக சாலை அமைத்துவிட்டு, பணியை முடித்துக்கொண்டாதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சாலை போடும்போது அதன் தரத்தை கண்காணிக்க வேண்டியது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் பொறுப்பு.

எனவே மண்சாலையாக மாறிய தார்சாலையை உரிய முறையில் ஆய்வு செய்து தரமற்ற சாலை அமைக்க காரணமாக இருந்த ஒப்பந்ததாரர்கள் மீதும் அவர்களுக்கு உதவிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்கள் பொறுப்பாவார்களா?

அரசு சார்ந்த பணியில் சாலை அமைப்பது, கட்டிடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பழுதடைந்தால், அந்த பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், 5 மாதத்தில் தார் சாலை, மண்சாலையாக மாறிய நிலையில் இந்த சாலைக்கும் இந்த விதி பொருத்துமா? மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: