×

திருவள்ளூர் பகுதிகளில் கோடைக்கு முன்பே அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் விரக்தி

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மின் பகிர்மான கோட்டத்தில் திருவள்ளூர், திருமழிசை, காக்களூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் 4 லட்சத்துக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதியில், மாதந்தோறும் மின் பராமரிப்புப்பணி எனக்கூறி குறிப்பிட்ட பகுதிகளாக முறையாக அறிவித்து மின் வினியோகத்தை காலை 9 மணி முதல் பகல் 2 மணி அல்லது 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த நாட்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கோடை காலம் துவங்கும் முன்பே பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் உடனடியாக இணைப்பு கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் ஒன்று முதல் 2 மணி நேரம் தடை செய்யப்படுகிறது. இதனால், வீட்டு உபயோக சாதனங்கள் இயக்குதல், அலுவலக பணி, குடிநீர் ஏற்றி வினியோகம் என அனைத்தும் பாதிக்கிறது. இன்னும் கோடை காலம் துவங்கும் முன்பே இத்தனை மின் தடை ஏற்படும் நிலையில், கோடையின்போது மிகப்பெரிய அளவில் மின்தடையை சந்திக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் வந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டால், டிரான்ஸ்பார்ம் மெயின் லைன் பழுது, தொழில் நுட்ப கோளாறு என பல காரணம் கூறுகின்றனர். அறிவிக்கப்பட்ட மின்தடையை விட, அறிவிக்கப்படாத மின்தடையால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், இதுபோன்ற மின்தடை வாடிக்கையாகி வருவதால், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.

Tags : areas ,Tiruvallur , In Tiruvallur areas Unannounced blackouts before summer: Public frustration
× RELATED இன்றைய மின்தடை (காலை 9.45 மணி முதல் 5 மணி வரை)