கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல்

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, வெளியிட்ட அறிக்கை: கோவை காந்திபுரத்தில் உள்ள சென்னை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கூலிப்படையினரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 23ம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதியதில் அவர் இறந்தார். இது குறித்து  நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கோவையில் நடந்தது விபத்து தானா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த மருத்துவமனை விவகாரத்தில் “வாடகை பாக்கிக்காக” கொடுத்த புகாரில் டாக்டர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார், ஜாமீனில் வெளிவந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவர் எப்படி விபத்து நேர்ந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதில் உள்ள மர்மம் என்ன, இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்திலும், அதிமுக முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்துவிட முடியாது.  எனவே, உமாசங்கர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி-நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரை  கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: