×

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கட்டிய தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளர் உட்பட 4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் தாளவனூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே ரூ.25.35 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தநிலையில், கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததையடுத்து 2020 டிசம்பர் மாதம் 20ம் தேதி தடுப்பணை திறக்கப்பட்டது. இந்தநிலையில், திறப்பு விழா கண்ட ஒரே மாதத்தில் அதாவது, கடந்த 23ம் தேதி தடுப்பணையின் கரைப்பகுதி திடீரென உடைந்தது. தண்ணீர் வெளியேறியது. இதில் ஒரு மதகு தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.

தடுப்பணை உடைந்தும் அதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், கடலூர் துணை ஆட்சியர் மற்றும் போலீசார் 4 மணி நேரத்துக்கு பிறகு சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் திமுக போராட்டத்திலும் ஈடுபட்டது. இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அரசு செயலாளர் மணிவாசன் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமைப்பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், தடுப்பணை கட்டுமானப்பணியில் கவனக்குறைவாக இருந்ததே காரணம் என விசாரணையில் ஊர்ஜிதம் ஆனது.

இதைத்தொடர்ந்து, சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் கே.அசோகன், பெண்ணை ஆறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் என்.சுரேஷ், கீழ்பெண்ணை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எ.ஜவஹர், கீழ்பெண்ணை ஆறு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.சுமதி ஆகியோரை தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதி 17(ஈ)ன் கீழ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்ட்ராக்டர் மீது என்ன நடவடிக்கை
கீழ் பெண்ணை ஆறு பகுதியில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டி 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தை உடனடியாக பிளாக் லிஸ்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், கான்ட்ராக்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பொறியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடுப்பணையை கட்டிய நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பையும், தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் 4 மருத்துவ கல்லூரி கட்டுமான பணியும் அந்த நிறுவனத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த நிறுவனம் மேற்கொண்ட கட்டுமான பணி தரத்தில் கேள்வி எழுந்துள்ளது. எனவே, அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிகள் முழுவதை ஆய்வு செய்யவும் மற்றும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எங்கே?
பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு மூலம் நடந்த தடுப்பணை கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு தரக்கட்டுப்பாட்டு பிரிவு மூலம் தரச்சான்று வழங்கிய பிறகே பில் A கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்பணி தரமற்ற முறையில் நடந்திருக்கிறது என்று தெரிந்தும் தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொறியாளர்கள் தரச்சான்று வழங்கியுள்ளனர். இதனாலேயே, ஒப்பந்த நிறுவனத்திற்கு பில் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தரக்கப்பட்டுப்பாட்டு பிரிவு பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன்?
தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இப்பணிகளை தினமும் ஆய்வு செய்து வந்த உதவி பொறியாளர் ஞானசேகர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தான் தினசரி நடந்த கட்டுமான பணி விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,Chief Engineer ,dam ,Tenpennai River , The issue of breaking the dam on the South Indian river Suspended 4 persons including Chief Engineer: Tamil Nadu Government action
× RELATED தேர்தல் விதி மீறிய 5 பேர் மீது வழக்கு