×

வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்

திருமலை: ‘வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதை நம்பி, பேராசை பிடித்த பேராசிரியர் தம்பதி 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரது மனைவி பத்மஜா, தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களது மகள்கள் அலேக்யா(27), சாயி திவ்யா(22). இதில் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான இசை கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட புருஷோத்தம், பத்மஜா தம்பதிகளுக்கு யாரோ ஒரு மந்திரவாதி அறிமுகமானதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனைப்படி செய்தால் வீட்டில் அதிசயங்கள் நடக்கும் என தெரிவித்தாராம். இதை நம்பி பேராசிரியர் தம்பதி தினசரி நள்ளிரவில் பூஜைகள் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீண்டநேரமாக பூஜைகள் நடத்தியுள்ளனர். அப்போது தங்கள் மகள்களையும் பூஜைக்கு அழைத்துள்ளனர். நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் இரு மகள்களும் பூஜை அறைக்கு சென்றனர். அங்கு மகள்களை நிர்வாணமாக அமரும்படி பெற்றோர் கூறினர். இதனால் திடுக்கிட்ட மகள்கள் முதலில் மறுத்துள்ளனர்.

ஆனால் அவர்களது பெற்றோர், ‘நம் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கவேண்டும் என்றால் நாங்கள் சொன்னதை நீங்கள் செய்தாக வேண்டும்’ என கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் மகள்கள் இருவரும் நிர்வாணமாக அமர்ந்துள்ளனர். அப்போது கண்களை மூடி வேண்டிக்கொள்ளும்படி மகள்களுக்கு பெற்றோர் தெரிவித்தனர். இதை நம்பி மகள்கள் இருவரும் கைகூப்பியபடி கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்தனர். அப்போது பெற்றோர் இருவரும் தயார் நிலையில் வைத்திருந்த உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் தம்புள்சை எடுத்து அலேக்யா, சாயி திவ்யா ஆகிய இருவரின் பின் மண்டையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த இருமகள்களும் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்காததால், உடனடியாக மதனப்பல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்த போது, பூஜையறையில் நிர்வாண நிலையில் இருந்த 2 மாணவிகளின் சடலங்கள் கிடந்தன. சடலங்களை மீட்ட போலீசார், பேராசிரியர் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி கூறுகையில், ‘2 மகள்களையும் நரபலி கொடுக்க இவர்களுக்கு அறிவுறுத்திய சாமியார் யார்? என விசாரித்து வருகிறோம்’ என தெரிவித்தார். பெற்ற மகள்களை பேராசிரியர் தம்பதி நரபலி கொடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒருநாள் பொறுங்கள் உயிருடன் வருவார்கள்’
தகவலறிந்த டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி மற்றும் போலீசார் பேராசிரியர் தம்பதி வீட்டுக்கு சென்ற போது, முதலில் புருஷோத்தம், பத்மஜா இருவரும் தாழ்ப்பாளை திறக்க மறுத்து ஜன்னல் வழியாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்கள், ‘நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்பித்து விடுவார்கள்’ என தெரிவித்தனர். இதைக் கேட்டு போலீசார் மற்றும் அங்கு திரண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கதவை திறக்க வேண்டுமென போலீசார் எச்சரித்த பிறகே அவர்கள் கதவை திறந்துள்ளனர்.


Tags : home ,professor couple ,daughters ,sorcerer ,Chittoor , Miracles happen at home. ' Professor couple who sacrificed 2 daughters: Cruelty by greed near Chittoor
× RELATED உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: கொரோனா விதிமுறைகள் தொடரும்