கிழக்கு லடாக்கை தொடர்ந்து சிக்கிமில் சீனா ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் விரட்டியடித்தது

புதுடெல்லி: கிழக்கு லடாக்கை தொடர்ந்து சிக்கிம் எல்லையில் அத்துமீறி ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இரு தரப்பு வீரர்கள் மத்தியில் நடந்த மோதலில் சீன தரப்பில் 20 வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம் ஊருடுவ முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆபத்தான ஆயுதங்களை கொண்ட சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்பட்டாலும் சீன ராணுவம் ஆதாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

அப்போதிலிருந்தே லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இரு நாட்டு ராணுவமும் தலா 50 ஆயிரம்  வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சீனா சிக்கிம் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்றுள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சீன வீரர்களின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுக்க முயன்றுள்ளனர். இதன் காரணமாக இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 4 பேரும், சீன தரப்பில் 20 பேரும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 20ம் தேதி சிக்கிமின் நகு லா பகுதியில் சிறிய அளவிலான மோதல் நிகழ்ந்தது. உடனடியாக, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான அதிகாரிகள் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த மோதல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சீனா, தன்னிச்சையாக யாரம் முடிவெடுக்கக் கூடாது என இந்தியாவை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, லடாக்கை போல சிக்கிமிலும் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

16 மணி நேரம் பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 9ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி காலை 10.30 மணி அளவில் சீனாவின் மோல்டோ எல்லைப் பகுதியில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 16 மணிநேரம் நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது. மோதல் நடந்த பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது, லடாக் எல்லையில் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories: