×

பா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ. பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரும் பாஜவில் சேர உள்ளனர். புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தனது அமைச்சர், எம்.எல்.ஏ., கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் சட்டசபை வளாகத்தில் நேற்று காலை முதலே பரபரப்பு நிலவியது. வில்லியனூர் அடுத்த கரசூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. மற்றும் ஆதரவாளர்கள் கார், பைக்கில் சட்டமன்றம் நோக்கி பேரணியாக வந்தனர். நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் மட்டும் காரில் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, தங்கள் கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்தனர். அமைச்சர் மற்றும் குடிசை மாற்று வாரிய தலைவர் பொறுப்புகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இருவரும் முதல்வரிடம் கொடுக்க தயாராக இருந்தனர். முதல்வர் மற்றும் அதிகாரிகள் அவரது அறையில் யாரும் இல்லாததால் அந்த கடிதங்களையும் சபாநாயகரிடமே வழங்கினர். பின்னர் நமச்சிவாயம் கூறுகையில், ‘சில ஆண்டுகளாகவே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தேன். டெல்லி தலைமை அழைத்து பேசியதால் தலைமையின் உத்தரவுக்கிணங்க மீண்டும் பணி செய்தேன். முதல்வர் என்னையும், சில சட்டமன்ற உறுப்பினர்களையும் ஓரங்கட்டுவதிலேயே கவனம் செலுத்தினார். அதனால், நான் கட்சியை விட்டு வெளியேற ஒரே காரணமாக முதல்வர் நராயணசாமியைத்தான் சொல்வேன். நான் இதுவரை எந்த கட்சிக்கு போவது என்ற இறுதி முடிவை எடுக்கவில்லை. நாங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்ட பிறகு நீங்கள் நீக்குவதில் என்ன இருக்கிறது?.

கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்காததால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்’  என்றார். ராஜினாமா செய்த நமச்சிவாயம், பா.ஜனதா கட்சிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் சேரலாம் என்று தெரிகிறது. காங்கிரசில் இருந்து நீக்கம்: புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘அமைச்சர், கட்சி தலைவர் பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு நமச்சிவாயம் துரோகம் செய்துவிட்டார்.

 ஒருவர் இரண்டு பதவிகளை வைத்திருக்க கூடாது என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி கேட்டுக்கொண்டது. அவர் தாமதப்படுத்தியதால், மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் பறித்தது. மேலும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை
புதுச்சேரியில் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு தகுதி நீக்கம், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா காரணமாக கட்சியின் பலம் 12 ஆக குறைந்துவிட்டது. இருப்பினும் கூட்டணி கட்சி திமுக 3, சுயேட்சை 1 ஆதரவால் காங்கிரசின் பலம் 16 ஆக இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 2 என மொத்த பலம் 13 ஆக இருக்கிறது. இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.

Tags : Puducherry ,Minister-MLA ,Speaker , Decided to join BJP Puducherry Minister-MLA resigns: To the Speaker Gave the letter
× RELATED புதுச்சத்திரம் சம்பவத்தில் திடீர்...