பாஜ மீது மம்தா குற்றச்சாட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு நேதாஜியை இழிவுபடுத்தினர்

பர்சுரா: “பாஜ.வினர்  ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு நேதாஜியை இழிவுபடுத்தி விட்டனர்,” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஜனவரி 23ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. கொல்கத்தாவில் கடந்த 23ம் தேதி நடந்த நேதாஜியின் 125வது பிறந்தாள் விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த மம்தா, அக்கூட்டத்தில் பேச மறுத்து விட்டார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பர்சுராவில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்று முதல்வர் மம்தா பேசியதாவது:

உங்கள் வீட்டிற்கு அழைத்து யாரையும் அவமானப்படுத்துவீர்களா?   அது மேற்கு வங்கத்தின் அல்லது நம் நாட்டின் கலாசாரமா? நேதாஜியை குறித்து அவர்கள் முழக்கமிட்டிருந்தால் அது பிரச்னையல்ல. ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு தொடர்பே இல் லாதவரை பற்றி கோஷமிட்டு, என்னை கேவலப்படுத்தினார்கள். இந்நாட்டின் பிரதமர் முன்பு நான் அவமானப்படுத்தப்பட்டேன். இதுதான் பாஜ.வினரின் கலாசாரம். மேற்கு வங்கத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவது வெளிநபர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது நேதாஜியும் நாட்டை விட்டு வெளியேறும் கட்சியினரால் அவமானப்படுத்தப்பட்டு உள்ளார். கட்சியில் இருந்து விலகிய துரோகிகளுக்கு இனிமேல் கட்சியில் இடமில்லை. அவர்களாக போனது நல்லது. கட்சியில் இருந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனடியாக விலகி கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நேதாஜியா? நடிகரா?

நேதாஜி பிறந்த நாளன்று கடந்த 23ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் ராஷ்டிரபதி பவனில் திறந்து வைக்கப்பட்ட படம் நேதாஜி அல்ல. அவரது வாழ்க்கை படத்தில் நடித்த புரசென்ஜித் சட்டர்ஜி என்று சமூக வலைதளங்களில் காரசார விவாத பொருளாகி உள்ளது. “அது நடிகருடைய படமல்ல. பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் பரேஷ் மைய்டி என்பவரால் தீட்டப்பட்டு, அவருக்கே நேதாஜி குடும்பத்தினரால் பரிசு அளிக்கப்பட்டது,” என்று பாஜ. தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த குடும்பத்தினர் அல்லது குடும்ப உறுப்பினர் என்பது பற்றி தெளிவான விவரங்களை பாஜ வெளியிடவில்லை.

Related Stories: