பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கராச்சி: பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று கராச்சியிலும், 2வது டெஸ்ட் பிப்.4ம் தேதி ராவல்பிண்டியிலும் தொடங்குகின்றன. தொடர்ந்து 3 டி20 போட்டிகள் பிப்.11, 13, 14 தேதிகளில் பகலிரவு ஆட்டங்களாக லாகூரில் மட்டும் நடக்கும். போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளன. இன்று கராச்சியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை தொடரின் ஒரு பகுதியாகும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் தென் ஆப்ரிக்கா 5வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளன.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட போதிலும், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது தென் ஆப்ரிக்கா 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2007ல் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றது. அதன் பிறகு இப்போதுதான் தென் ஆப்ரிக்கா பாகிஸ்தானில் விளையாடுகிறது. அங்கு இதுவரை விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களில் 2 தொடரை தென் ஆப்ரிக்கா வென்றுள்ளது. அது மட்டுமல்ல இந்த 2 அணிகளும் இதுவரை 12 தொடர்களில் ஆடியுள்ளன. அவற்றில் 7 தொடர்களை தென் ஆப்ரிக்காவும், ஒரு தொடரை பாகிஸ்தானும் கைப்பற்ற, மீதி 3 தொடர்கள் டிராவில் முடிந்தன.

இரு அணிகளும் விளையாடிய 26 டெஸ்ட்களில் தென் ஆப்ரிக்கா 15, பாகிஸ்தான் 4 வெற்றி கண்ட நிலையில், மீதி 7 டெஸ்ட் டிராவில் முடிந்தன. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்க வீரர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. அதே சமயம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும்,  இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்ற கணக்கிலும் தோற்ற பாகிஸ்தான், சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்ளூரில் ஆடிய 2 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட பாகிஸ்தான் தோற்கவில்லை. வங்கதேசம், இலங்கைக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடர்களை தலா 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியள்ளது. அது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.

Related Stories:

>