மாமல்லபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய கார் திடீரென தீப்பற்றி எரிந்தது: அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்

மாமல்லபுரம்:  சென்னை சோழிங்கநல்லூரை  சேர்ந்தவர் ராஜ்குமார். நேற்று அதிகாலையில் ராஜ்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோடு அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, காரில் புறப்பட்டார். அதிகாலையில், தனியார் ஓட்டலுக்கு சென்று மது அருந்திய அவர்கள், விலை உயர்ந்த காரில், இசிஆர் வழியாக கல்பாக்கம் சென்றனர்.

பின்னர், அங்கிருந்து மீண்டும் தனியார் ஓட்டல் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார். பூஞ்சேரி கூட்ரோடு அருகே வந்தபோது, திடீரென ஒரு பசுமாடு சாலையில் குறுக்கே ஓடியது. இதனால் ராஜ்குமார், உடனடியாக காரை இடதுபுறமாக திருப்பினார்.

அதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற மக்கள், காரில் இருந்த 4 பேரையும் லேசான காயங்களுடன் மீட்டனர். இந்நிலையில், 4 பேர் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில், திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உடனே, பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பரவி, கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. தகவலறிந்து மாமல்லபுரம் எஸ்ஐ நாராயணன் சம்பவ இடத்துக்கு சென்று லேசான காயமடைந்த 4 பேரையும் மீட்டு, பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>