×

கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கி வரும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன துணை மேலாளர் செந்தில் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் நிறுவனத்தின் பெயரில் சிலர் போலியான வாகன காப்பீடு தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் வீராசாமி, துரை ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, இந்த மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் (43), ஆனந்த் (40), புதுக்கோட்டை சீரனூரை சேர்ந்த அன்சார் அலி (43), ஜெயின் அலாவுதீன் (40), செந்தில்குமார் (47) மற்றும் சுமதி (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி காப்பீடு ஆவணங்கள், அரசு முத்திரைகள், கணினி, 2 லேப்டாப்கள், ரூ.9,54,910, 133 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் ரூ.3 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மோசடி குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகன காப்பீடு நிறுவனங்கள் ஆன்லைனில் வாகன காப்பீடு பதிவு செய்தல் மற்றும் ஆவணங்கள் சேகரித்தல் போன்ற பணிகளை செய்து வந்தது. திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் (43) தலைமையிலான கும்பல் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களால் இணையதளங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீடு விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக வணிகம் சார்ந்த லாரி மற்றும் பேருந்து விவரங்களுக்கு பதிலாக இருசக்கர வாகன விவரம் மற்றும் விண்ணப்பிப்பவர் விவரம் பதிவு செய்து, குறைந்த பாலிசி தொகை செலுத்தி உள்ளனர்.

அந்த காப்பீட்டு ஆவணத்தை பதிவிறக்கம் செய்து அதில் சரியான வாகன விவரம் மற்றும் அதிகமான காப்பீட்டு பிரிமியம் தொகை ஆகியவற்றை மாற்றம் செய்து உண்மையான காப்பீட்டு ஆவணம் போல் போலியாக தயார் செய்து காப்பீடு எடுத்த வாகன உரிமையாளர்களிடம் மோசடி செய்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் 300க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதற்காக தனியாக ஒரு அலுவலகம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மாரியப்பனுக்கு ஏஜென்டாக ஆனந்த், ஆன்சார் அலி, ஜெயில் அலாவுதீன், செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இந்த மோசடிக்கு கணினி மூலம் போலி காப்பீடு தயாரித்து கொடுத்தல் மற்றும் வங்கி கணக்குகள் பராமரிக்க சுமதி உதவியாக இருந்துள்ளார். எனவே, வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்திற்கு ஆன்லைனில் காப்பீடு எடுக்கும் போது, காப்பீடு நிறுவனத்தின் உண்மை தன்மையை காப்பீடு அலுவலகத்திற்கு அல்லது அதன் இணைய தளத்திற்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* பல கோடி மோசடி தொழிலதிபர் கைது
மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோயில் தெருவில் சையது ரகுமான், அவரது சகோதரர் அனிசூர் ரகுமான் ஆகியோர் ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்ட் பேங்க்ரஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர். இங்கு முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நகைக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து வட்டியில்லா கடன் பெற்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், ஐபிசி 406, 420 உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து நகைக்கடை உரிமையாளர்களை தேடி வந்தனர். ஒன்றறை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து சையது ரகுமான், அவரது சகோதரர் அனிசூர் ரகுமான் மற்றும் கடையில் வேலை செய்து வந்த ரிகானா (எ) அருணா ராணி, சுஜிதா (எ) வளர்மதி, ஷஹூனா (எ) சிவகாமி ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Rs 3 crore scam: 6 arrested, including woman; 133 shaving, Rs 9.54 lakh, car confiscated
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை