×

விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்தில் நேற்று காலை முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான பயணிகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் துருவித் துருவி சோதனையிடுகின்றனர். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், ஜாம் பாட்டில்கள், அல்வா போன்ற உணவுப் பொருட்கள் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்வட்ட பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளது போல்,வெளிவட்ட பாதுகாப்பில் விமானநிலைய போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு ஸ்பெஷல் போலீசார் சுமார் 100 பேர் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். அதோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சிறப்பு அனுமதி பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும், வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.


Tags : airport , Extra security for the airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்