முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை கொலை செய்த வழக்கில் பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க காலஅவகாசம்: போலீசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வீட்டுக்குள் கடந்த 2005ம் ஆண்டு வட நாட்டு கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பல் தான் காரணம் என்பது தெரிந்தது. இது தொடர்பாக, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 32 பேர் மீது வழக்கு பதிந்ததில் 23 பேர் தலைமறைவாகிவிடவே அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார்.

அவரது சகோதரர் ஜெகதீஷ் 2005ம் ஆண்டிலிருந்து விசாரணை கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார். அவர் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிமன்றம் வழக்கின் தாமதம் குறித்து கேள்விஎழுப்பியது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயில்தர்சிங்குக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தடைபட்டுள்ளது என்றார். காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்த திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 3 வாரத்திற்குள் ஜெயில்தர் சிங்கை கைது செய்ய வேண்டும். மேலும் ஜெகதீஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories:

>