பேச்சுவார்த்தைக்கு அழைப்பு சென்னை குடிநீர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்: சங்க நிர்வாகிகள் தகவல்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவு இருப்பு உள்ளதால் தற்போது சென்னை மக்களுக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாதவர்களுக்கு லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி, மாநகர் முழுவதும் 675 லாரிகள் மூலம் 32 மில்லியன் லிட்டர் குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்த லாரிகளுக்கு கடந்த ஜூலை 7ம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அந்த லாரிகளுக்கு புதிய வாடகையில் ஒப்பந்தம் போட வலியுறுத்தப்பட்டது.

இதனால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 6 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.801ம், 9 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.901ம், 16 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.1245 என வாடகை கட்டணம் வழங்க கோரி குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் குடிநீர் வாரிய நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஆனால், இந்த வாடகை கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறி குடிநீர் வாரியம் ஒப்பந்தம் செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்களுடன் குடிநீர் வாரிய அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, 19ம் தேதி 21ம் தேதி, நவம்பர் 14ம் தேதி என பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பேரில், வாடகை கட்டணத்தை குறைத்துக் கொண்டு அவர்கள் லாரியை இயக்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். ஆனால், பேச்சுவார்த்தை முடித்து 2 மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. மேலும் வாடகை உயர்த்துவது தொடர்பாக குடிநீர் வாரியத்திடம் எந்த பதிலும் வரவில்லை. இதை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக முடிவெடுத்து அறிவித்தனர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகுளில் வாழும் மக்களுக்கு லாரிகள் மூலம கிடைக்கும் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், குடிநீர் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை ஏற்று இந்த வேலை நிறுத்த போராட்டம் திடீரென தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதனால் வழக்கம் போல் குடிநீர் லாரிகள் இயங்க தொடங்கியது. இதுகுறித்து, குடிநீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம் கூறியதாவது:‘திடீரென வேலை நிறுத்தம் செய்தால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே உங்களது கோரிக்கை குறித்து முடிவெடுக்க எங்களுக்கு 4 நாட்களாவது தேவை.

எனவே வாபஸ் பெற்றுவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும்’ என்று எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை ஏற்று வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். நேற்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். மீண்டும் இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். 6 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.801ம், 9 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.901ம், 16 ஆயிரம் லிட்டர் லாரிக்கு ரூ.1245 என வாடகை கட்டணம் வழங்க கோரினர்.

Related Stories: